நிர்வாண உண்மைகள் (2) : கவிதை தொகுப்பு

அண்ணே வணக்கம்ணே !

நம்ம கவுதைகளை எல்லாம் தொகுத்து புஸ்தவமா ஏத்திக்கிட்டிருக்கன். இது ரெண்டாவது தொகுப்புக்கு எளுதின முன்னுரை .

வணக்கம் !

புத்தகங்களுக்கு எழுத்தாளர்கள் முன்னுரை எழுதுவது வழமைதான்.. ஆனால் என்னைப் பொறுத்தவரையில் நூல் தொகுப்பு முடியும் முன்பாகவே முன்னுரை மனதில் விரிகிறது. இன்னும் சொல்லப்போனால் முன்னுரை எழுதவே என் எழுத்துக்களை தொகுத்து கொண்டிருக்கிறேனோ என்ற ஐயமும் உண்டு .

கவிதைக்கு இலக்கணம்  ? பலரும் சொல்லி  இருக்கலாம். எனக்கு என்னமோ ஒரு கவிதையின் ஒரு பத்தியிலாவது இரண்டு சொற்களின் இணைவு அந்த சொற்களுக்கான பொருளை தாண்டி வேறொரு பொருளை தர வேண்டும் என்று தோன்றுகிறது.

இந்தக் கவிதைத் தொகுப்பில் பாரதி கணக்காய்  ஆத்தாவுக்காக ஏகத்துக்கு  பொங்கியிருப்பேன். அன்றாட வாழ்விலும் இவன் இப்படித்தான் புலம்புவான் போல என்று நினைத்துவிடாதீர்கள். நான் பலமுறை சொல்வதை போல் ஆன்மீகம் என் ஓ. எஸ் .பெரியார் என் antivirus எனவே அது பாட்டுக்கு இது இது பாட்டுக்கு இது என்றுதான் வாழ்க்கை ஓடுகிறது.

அதேசமயம் “ஆதரித்தாலும் வலிமையாக ஆதரிப்பார் .எதிர்த்தாலும் தீவிரமாக எதிர்ப்பார் “ என்று இந்திரா அம்மையார் கலைஞரை பற்றி சொன்னது போல் நான் இரண்டிலுமே உண்மையாக இருப்பேன் .உண்மையான தீவிரத்துடன் இருப்பேன்.

அந்த கணம் அந்த உணர்ச்சி …அது முழுக்க முழுக்க உண்மையானது. அதை எழுதிய நான் இன்று இல்லை.இணையம் எங்கும் சிதறிக் கிடக்கும் என் எழுத்துக்களை  தொகுக்கும் ஒரு தொகுப்பாளர் தான் .

இன்னும் சொல்லப்போனால் ஒரு வாசகன் .இந்தத் தொகுப்பில் இருக்கும் எல்லா கவிதைகளும் ஜீவ கவிதைகள் என்று வக்காலத்து வாங்க விரும்பவில்லை .கொழுக்கட்டை போல் சில வரிகள் இருந்தாலும் அதில் பூரணம் போல் சில வரிகள் இருந்தாலன்றி  இந்தத் தொகுப்பில் சேர்க்கவில்லை.

சில வரிகளைப் படிக்கும்போது எழுத்தாளர் லாசரா  நினைவு வருவதை தவிர்க்க முடியவில்லை .அதேசமயம்   போலி செய்தல் –  தழுவுதல் என்ற பேச்சுக்கே இடமில்லை .

ஏனென்றால் உணர்வுகள் ஒன்றாக இருந்தாலும் களம் வேறு .

சமீபத்தில் இளையராஜாவின் ஒரு பேச்சு .அதில் ஒரு வரி Music should happen “ (இசை என்பது தானாய் ஏற்பட வேண்டும் )இதிலுள்ள கவிதைகளும்இந்த வகைப்பாட்டை  சார்ந்தவையே.

நூற்றுக்கு நூறு இவை நிகழ்ந்தவை தானாய் என்னில் ஜனித்த வை என்று சொல்ல முடியாது உணர்வு  எழுத்தாகும் போது என்னில் இருக்கக்கூடிய ஒரு  கவிஞன்/எழுத்தாளன் அவ்வப்போது குறுக்கிட்டிருக்கலாம்.

ஆனால் அது  சற்று காரம்-  மணம் – குணம் சேர்க்கும் முயற்சியாக இருந்திருக்கலாமே தவிர சரக்கு என்னவோ எனக்கு சொந்தமில்லை. பல காலமாய் அண்டைவெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் என்று சொல்வது வழக்கம்.

சமீபத்தில் நடிகர் ராஜேஷ் அவர்களின் பேட்டியை பார்த்ததில் அதை ஆகாஷிக் ரிக்கார்ட்ஸ் என்றும் என்றும் சொல்வதை அறிந்துகொண்டேன் . ஜெயலலிதாவை வானளாவ புகழ்ந்த வர்களுக்கு வேண்டுமானால் அவர் எதையும் செய்ய மறந்திருக்கலாம்

ஆனால் “அவள்” என் ஒவ்வொரு எழுத்துக்கும் அந்தகாலதந்தி கணக்காய் பைசா சுத்தமாய் கணக்கிட்டு  சன்மானம் தந்துவிடுகிறாள். தேர்தலுக்கு முன் அரசியல்வாதிகள் வாக்குறுதிகளை அள்ளி விடுவது போல் நானும் அவளுக்கு அள்ளி விட்டிருக்கிறேன்.

அவளுக்காக நான் எழுதிய கவிதைகளை தொகுத்து  வெளியிடுவது முதல் வாக்குறுதி . ஏறக்குறைய 20ஆண்டு கால போராட்டத்துக்கு பின் அவள் அருளால் புரண்டு படுத்து, கை ஊன்றி எழுந்து  இன்று வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கிறேன் .

பதினோரு ஆண்டுகள் அவளை காத்திருக்க செய்துவிட்டேன் இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகள் கூட கையெழுத்துப் பிரதியிலிருந்து தட்டச்சு செய்தவை  அல்ல .தட்டச்சு செய்ய வேண்டிய பிரதிகள் பத்து கிலோ வரை இருக்கிறது.

பார்ப்போம் துவங்கிவிட்டோம்..  அவள் முடித்து வைப்பாள்.  என்பதே என் நம்பிக்கை.இந்த கவிதைகளை படிக்கும் உங்களுக்குள் ஏதேனும் சலனம் மற்றும் மாற்றம் நிச்சயம் ஏற்படும்.

“ யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” என்ற உணர்வோடு இந்த கவிதைகளை தமிழ் கூறு நல்லுலகத்தின் பரிசீலனைக்கு வைக்கிறேன். இதில் ஒன்றுக்கொன்று முரண்பட்ட பல அம்சங்கள் காணக் கிடைக்கும் அவளே முரண்பாடுகளின் மொத்த உருவம் இதை ஸ்ரீ அம்மன் சதநாமாவளி விளக்க உரை என்ற நூலில் விரிவாகவே சொல்லியிருக்கிறேன். ( அந்த நூல் மின் நூலாய் வெளியான போது சக எழுத்தாளர் ஜூலி கணபதி எழுதிய விமர்சனத்தை தான்  ஆரம்ப பக்கங்களில் தந்திருக்கிறேன்)

அவள் பிள்ளை என் நூலில் முரண்பாடுகள் இல்லாவிட்டால் எப்படி ?

-சித்தூர் .முருகேசன்

11-1-2019 ( உறங்கா இரவின் விடியல் 3.35)

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *