அனுபவஜோதிடம் : 1

அண்ணே வணக்கம்ணே !

ஒரு நகைச்சுவை துணுக்குக்கு சிரிப்பதா கூடாதா என்பதை முடிவு செய்யவும் ஒரு வரலாற்று புரிதல் தேவைப்படுகிறது. அது எனக்கு இருப்பதாகவே கருதுகிறேன்.

ஆனாலும் இணைய வெளியின் ஆரம்ப சூரர்களை இழுக்கவும்,இழுக்கப்பட்டவர்களை தோளில் அழுத்தி உட்கார வைக்கவும் என்னென்னவோ “வித்தைகள்” எல்லாம் காட்ட வேண்டி இருந்தது.

அவசரகுடுக்கைகளை இளைப்பாற வைக்கவும், பண்டிதர்களை மர்மத்தில் தாக்கி அசரவைக்கவும், அரைவேக்காடுகளை வேக வைக்கவும் நான் பட்ட பாடு எனக்கு தான் தெரியும். இல்லாவிட்டால் 4 கோடி பார்வைகளை பெறுவதென்பது இயலாத காரியம்.

அன்றாடங்காய்ச்சிகள் போல அன்றாட ஹிட்ஸ்/பார்வைகளுக்காக நான் ஆடிய பார் விளையாட்டுகள் என் எழுத்துக்களை நீர்க்குமிழிகளாக மாற்றிவிட்டன,

உள்ளடக்கம் எத்தனை ஒர்த்தானதாக இருந்தாலும் நடை / வரிசைப்பாடு என்று எதுவும் இல்லாது. ஆன்லைனில் ஜோதிடம் கற்பிப்பது என் நோக்கமல்ல. கு.பட்சம் என் அனுபவங்கள் பத்திரப்படுத்தப்படுவதே என் நோக்கம்.

பை ப்ராடக்ட் கணக்காய் ஓரிருவர் கற்றுக்கொண்டால் மகிழ்ச்சியே. இந்த முயற்சிகளை ஏற்கெனவே ப்ளாக் காலத்திலும்,வெப்சைட் வைத்த பிறகும் கூட துவங்கிப்பார்த்தேன்.
போனியாக வில்லை.

ஒரு முறை ஒலிவடிவில் கூட ஆரம்பித்து தம் கட்டியது ஞா வருகிறது . ஒலி- ஒளி வடிவங்களை நீண்டகாலத்துக்கு தக்க வைக்க முன் தயாரிப்புக்காகவும் -தொழில் நுட்ப மேம்பாட்டுக்காகவும் அதிக நேரம் செலவழித்தாக வேண்டும்.

என் நிலையோ அதற்கு அனுமதிப்பதாயில்லை. எனவே காமா சோமாவென்று ஆடி முடித்தாயிற்று. இறங்கி வந்த பிறகுதான் குற்ற உணர்ச்சி குறுகுறுக்க வைக்கிறது. ஜோதிடம் என்பது எங்கும் கிடைக்கும். கூகுளாண்டவரை அணுகினால் சுஜாதாவின் காவிரி குறித்த வர்ணனை போல் கொட்டுகிறது.

ஆனால் என் முறை / அது என்னோடு முடிந்துவிடக்கூடாது . நண்பர்கள் பலரின், ஜோதிடம் கற்றுக்கொடுங்கள் என்ற வேண்டுகோளிற்கிணங்க இந்த புதிய முயற்சி என்ற முன்னுரையுடன் துவக்கி 50+ வீடியோக்களை வெளியிட்டாகிவிட்டது.

இவற்றை எழுத்து வடிவில் கொண்டுவருவது ஒன்றே என் முறையை வரும் தலைமுறைகளுக்கு கொண்டு செல்லும் என்பது என் நம்பிக்கை. வீடியோவில் பேசுவது என்பது வேறு – அது அந்தந்த நேரத்து என் மன நிலையை பொருத்தது.ஆனால் எழுத்தில் கொண்டுவரும் போது முடிந்தவரை ஒரு முழுமையை ஒப்பேற்ற முடியும். இதனால் தான் அவுட் சோர்சிங் என்பார்களே அந்த முறையில் என் வீடியோக்களை எழுத்தாக்கி /எழுத்தை செப்பனிட்டு தர முனைந்திருக்கிறேன்.

இது வரலாறாகுமா? அல்லது இதுவும் தகராறாகவே முடியுமா என்பது “ஆத்தா மனசு போல” நடக்கும். இனி அடுத்தடுத்த பதிவுகளில் ஒரு சில திருத்தங்கள் /குறிப்புகள் இருக்குமே தவிர இப்படியான ஆதியோடந்தமான புலம்பல்கள் இருக்காது என்று உறுதி கூறுகிறேன்.

எந்த கலையையும் கற்றுக்கொள்வதற்கு, கற்றுக்கொடுப்பவரை விட, நமது கற்றுக்கொள்ளும் ஆர்வமே மிக முக்கியம்.எனது ஜோதிட ஆர்வத்திற்கு, எனது வாழ்க்கையில் ஏற்பட்ட சில கேள்விகள்,அந்த கேள்விகளுக்கான பதிலைத் தேடிய பயணம், அந்த பயணத்தில் சென்றடைந்த ஓயாசிஸ்தான் இந்த ஜோதிட அறிவு. இதனை கூர் தீட்ட உதவியவை என் தொடர் வாசிப்புகளும் -ஆர்வமுமே. ஒவ்வொரு ஜாதகமும் என்னை பண்படுத்தியது .படிப்பித்தது.

ஜோதிடத்தை பயிற்றுவிக்கும்போதும் /கற்கும் போதும் ,மிக எளிதாகவே தோன்றும். சுற்றி சுற்றிவந்தாலும்
ஜோதிடத்தில், 12 ராசிகள்,27 நட்சத்திரங்கள்,12 பாவங்கள், 9 கிரகங்கள்தானே? ஆனால் இவற்றின்
இணைப்பு, அல்லது சேர்க்கையின் விளைவான பலன்களை கணிப்பதற்கும் -சொல்வதற்கும்

படைப்பு -இயற்கை – வாழ்க்கை -மனித மனம் -சமூகம் குறித்த ஆழ்ந்த அறிவு தேவைப்படுகிறது.

மனிதன், பூமியில் பிறக்கும்போது மற்ற அனைத்து உயிரினங்களை போலவே திருவிளையாடல் சிவாஜி போல் அனைத்தும் அறிந்த பிரபஞ்ச அறிவுடன்(Universal Mind) அபேத பாவத்துடன் தான் பிறக்கிறான்.
பெற்றோர்களின் வளர்ப்பினாலே, மனித மூளையில் பேத பாவம் உருவாக்கப்பட்டு, அது தனிப்பட்ட அறிவாக(Individual Mind) வளர்கிறது.

ஜோதிடத்தின் முக்கிய நோக்கமே, எதிர்காலத்தை கணித்துக்கூறுவதாகும். காலம், இறந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர் காலம் என வகைப்படுத்தப்படுகிறது. மெய்யியல் ஞானி.ஓஷோ, நிகழ் காலம் மட்டுமே உண்டு என் கிறார்.அது விழிப்புற்றவர்களுக்கானது.

பொதுவாக, நாம் நிகழ் காலத்தில் தோற்றுப்போகும் போது, கடந்த காலத்தை நினைவு கூற தொடங்குகிறோம். அல்லது எதிர்காலத்தை கனவு காண்கிறோம். அல்லது அறிய துடிக்கிறோம்.

எதிர்காலத்தை, ஓரளவுக்காவது அறிந்துக் கொள்ள, பெரியவர்கள் வகுத்து தந்த விதிகளே, ஜோதிடத்தின் அடிப்படையாகும்.ஆனால் எதிர்காலத்தை,அறுதியிட்டு சொல்லும் போதே,அது காற்றுப்போல நிலையில்லாது மாறிவிடும் இயல்புடையது.

பலனை சரியாக கணிப்பதற்கு, பேத பாவமில்லாத Universal Mind தேவையாயிருக்கிறது. சமுதாயத்தை நோக்கிய பொது நல நோக்கே,அபேத பாவம் ஆகும். பொதுநல நோக்கு கொண்ட ,அடிப்படை விதிகள் நன்கு அறிந்த ஜோதிடரால் எதிர்காலத்தை தெளிவாக கணிக்க முடியும்.

(தொடரும்)

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *