ஏழு ஏழா உலக வாழ்வை : நீங்கள் கேட்ட விளக்கம்

அண்ணே வணக்கம்ணே !
ஒவ்வொரு பண்டமா சமைச்சு கொடுத்து உங்களை அடிமையாக்கற புது பொஞ்சாதி மாதிரி இல்லாம எல்லா டிஷ்க்கும் செய்முறை குறிப்பை ஒட்டுமொத்தமா ஒரே அட்டெம்ப்ட்ல கொடுத்துரனும்னு தான் நான் நினைக்கேன். ஆனால் உங்கள்ள பலருக்கும் சமைக்க கத்துக்கற எண்ணமே இல்லைனு கன்ஃபார்மா தெரிஞ்சுருச்சு .

கடந்த பதிவுல ஒரு புது டெக்னிக்கை பத்தி எழுதியிருந்தேன். ஒளிவு மறைவு இல்லாம /எல்லா டீட்டெய்லும் தந்திருந்தேன்.ஆனாலும் என் பர்த் டீட்டெய்ல் இது /இப்ப எத்தனையாவது ரவுண்டு நடக்குது? என்ன நடக்கும்னு இன்பாக்ஸ்ல கேட்கிறாய்ங்க.மெயில் பண்றாய்ங்க.

ஆகவே இந்த பதிவுல முடிஞ்ச வரை இன்னம் கொஞ்சம் டீட்டெய்ல்ஸ் கொடுத்துட்டு கழண்டுக்கிறேன். (மிடியல)

நம்ம உயிர் எண் /கூட்டு எண்?பெயர் எண் இந்த மூன்றில் எது தொடர்பான கிரகம் நம்ம ஜாதகத்துல லக்னாத் சுபரா இருந்து ஓரளவு சொல்லிக்கிற ரேஞ்சுல உட்கார்ந்திருக்கு/ அல்லது எது தொடர்பான கிரகம் லக்னாத் பாபியாகி குட்டிச்சுவராகி உட்கார்ந்திருக்கு பார்க்கனும். அதுதான் உங்க வாழ்க்கைய சில கட்டங்களாக பிரிப்பதற்கான அலகு .

எண்களுக்குரிய கிரகங்கள்:
1-சூ
2-சந்தி
3-குரு
4-ராகு
5-புத
6-சுக்
7-கேது
8-சனி
9-செவ்
பிறப்பு/உயிர் எண்:
உங்க பிறந்த தேதிய சிங்கிள் நெம்பராக்கினா கிடைக்கிறது பிறப்பு/உயிர் எண்.
கூட்டு எண்/ஸ்தூல எண்:
உங்க பிறந்த தேதி/மாசம்/வருசத்துல உள்ள இலக்கங்களை கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா கிடைக்கிற நெம்பர் .

பெயர் எண்:
சொத்து வாங்கினா எந்த பேர்ல பதிவு செய்விங்களோ –அந்த பேர்/ அரெஸ்ட் வாரண்ட் வந்தா எந்த பேருக்கு வருமோ அந்த பேர்ல உள்ள ஆங்கில எழுத்துக்களுக்குண்டான எண்களை கூட்டி சிங்கிள் நெம்பராக்கினா வர நெம்பர் (படம் உதவி:கூகுள்)

இப்படி டிரைவ் பண்ண நெம்பர்க்குரிய கிரகங்கள்ள எந்த கிரகம் பலமா இருக்குனு பாருங்க. அந்த கிரகத்துக்குரிய எண்ணை அலகா வச்சுக்கிட்டு உங்க வாழ்க்கையை கட்டங்களா பிரிங்க.

சூ -1 ,சந்திரன்னா- 2 /அப்ப ஒவ்வொரு வருசமும் –ஒவ்வொரு ரெண்டு வருசமும் ஒரு ரவுண்டாயிருது . யூத்து இப்படியே பிரிக்கலாம். என்னை மாதிரி நடுவயசை தாண்டினவிக?

சூரியன்னா பத்து பத்துவருசமா பிரிங்க/ சந்திரன்னா இருபது இருபது வருசமா பிரிங்க. நினைவு கூற எளிது .ஃபோர் காஸ்ட் பண்றதும் எளிது .

மத்தபடி குரு /சனி முதலான கிரகங்களுக்குரிய எண்கள்னா அந்த எண்களையே அலகா கொண்டு பிரிக்கலாம்.

இப்ப உங்க லைஃபை ரவுண்ட்/ரவுண்டா பிரிச்சுட்டிங்க தானே?

மொத ரவுண்டு :
உடல்,மன,குணநலன் ,அழகு , நிறம்,கவர்ச்சி ,தலை,முகம் ஆகியவற்றின் மீது அதிகமா ஆதிக்கம் செலுத்தும்.

2ஆவது ரவுண்டு:
தனம்,வாக்கு,குடும்பம்,கண்கள்,தொண்டை,வாய்

3 ஆவது ரவுண்டு:
இளைய சகோதர,சகோதிரிகள்,தைரியம்,ஷட்டில் பிரயாணங்கள்,காது,இசை ஞானம்,புஜங்கள்,தோள்

4ஆவது ரவுண்டு:

தாய்,தாய் வழி உறவினர்,பூமி,வீடு,வாகனம்,கல்வி,சுகஸ்தானம்,இதயம், தங்கள் பாசத்துக்குரியவர்கள்

5.ஆவது ரவுண்டு:
பிள்ளைகள்,மன நிம்மதி,பெயர்,புகழ்,அதிர்ஷ்டம்(பூர்வ புண்ணியம்) ,தியானம்,மேல் வயிறு

6.ஆவது ரவுண்டு:
வெல்ல முடிந்த சத்ரு, தீரக் கூடிய ரோகம், தீர்க்கக்கூடிய ருணம்(கடன்),தாய்மாமன்,வயிறு

7.ஆவது ரவுண்டு:
நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்,ஆஃபீஸ் கொலிக்ஸ்

8.ஆவது ரவுண்டு:
வெல்ல முடியாத,உயிருக்கு ஆபத்து விளைவிக்ககூடியசத்ரு, தீராதரோகம், தீர்க்கமுடியாதருணம்(கடன்),சிறைப் படுதல், மஞ்சள் கடிதாசு கொடுத்தல்,அடிமையாதல்,மேஜர் விபத்து, ஆப்பரேஷன்,மர்மஸ்தானம்,பிரிவுகள்,வீண்பழி சுமத்தல்

9.ஆவது ரவுண்டு:
தந்தை,தந்தைவழி உறவு,தந்தை சொத்து, சேமிப்புக்கள்,தூரபிரயாணங்கள்,வெளி நாட்டுப் பயணங்கள்.பப்ளிஷிங்,தூர தேச தொடர்புகள், கோவில் ,குளம்,சேவை அமைப்புகள் நிர்வாகம் தொடை பகுதிகள்

10ஆவது ரவுண்டு:
(ஜீவன பாவம்) வாழும் வழி(மோட் ஆஃப் லிவிங்க்),தொழில்,வேலை,உத்யோகம்,வியாபாரம்,முழங்கால்

11.ஆவது ரவுண்டு:
(லாப பாவம்) மூத்தசகோதிரி/சகோதரன்,லாபம்.பாதத்துக்கும் முழங்காலுக்கும் இடையில் உள்ள பகுதி

12ஆவது ரவுண்டு:
(விரய பாவம்) தூக்கம்,செக்ஸ்,மரணம்,மரணத்துக்கு பின்னானநிலை,செலவு செய்யும் விதம்,பாதங்கள்.

உங்கள் வாழ்வை பல கட்டங்களாக பிரிக்க தேர்வு செய்த அலகு எந்த கிரகம் தொடர்பானதோ /அந்த கிரக காரகங்கள் மேல அந்த காலகட்டத்துல நிறைய பாதிப்புகள் இருக்கும் (பாசிட்டிவா நெகட்டிவாங்கறது கடைசியில சொல்றேன்.)

ஆகவே கிரக காரகங்களையும் நீங்க தெரிஞ்சுக்க வேண்டியது அவசியம். (கிரகங்களே சொல்றாப்ல தந்திருக்கேன்)

ஒரு வேளை குறிப்பிட்ட கிரக ஆதிபத்யம் கொண்ட ரவுண்டு நெகட்டிவ்னா அந்தந்த கிரக காரகங்களுக்கு கீழவே பரிகாரங்கள் தந்திருக்கன். ஃபாலோ பண்ணிக்கங்க. எஃபெக்ட் குறையும்.

1.சூரியன் ஸ்பீக்கிங்:
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.கிழக்குத்திசை, மாணிக்கக்கல், தானம்-கடிகாரம், ஆத்மா- பகல்ல பிறந்தவுகளுக்கு தந்தை, தந்தையுடன் உறவு, தந்தைவழி உறவு, தன்னம்பிக்கை இதற்கெல்லாம் நானே அதிகாரி. பல், எலும்பு, முதுகெலும்பு, வலதுகண், மலைப் பிரதேசங்கள், தலைமைப் பண்புகள், தன்னம்பிக்கை, ப்ராக்டிக்காலிட்டி, மேற்பார்வை, தரக்கட்டுப்பாடு, தாமரைமலர், விளம்பரங்கள், நாளிதழ்கள்,பயன் கருதா பொது நலப்பணிகள்,
இவை யாவும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே! பித்தளை, திட்டமிட்ட தொடர்ச் சுற்றுப்பயணங்கள், உள்ளூர், ஊராட்சி, நகராட்சி மன்றங்கள், ஒளிவு மறைவற்ற பேச்சு, ஒல்லியானவர்கள், கோரைப்புல் போன்ற தலை முடியுடையவர்கள், கூரையில்லாத வீடு, ஏகபுத்திரன், ஒற்றைத்தலைவலி, எலும்பு முறிவு, தூக்கமின்மை இவையாவும் என் அதிகாரத்தின் கீழ்வருபவையே.
பரிகாரங்கள்:
1. தினசரி சூரிய நமஸ்காரம் செய்க. காலை மாலை வாக் செய்யவும்.
2. காயத்ரி மந்திரம் படிக்கவும்
3. சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) அதிகமுள்ள உணவை உட்கொள்ளவும்.
4. சிறு நீர்ப் பரிசோதனை செய்வித்துக் கால்ஷியம் இழப்போ, யூரிக் அமிலத்தின் அதிகரிப்போ இருந்தால் உடனடியாகச் சிகிச்சையைத் துவக்கவும்.
5. நான் அதிகாரம் செலுத்தும் விசயங்களில் இருந்து வருவாயைத் தவிர்க்கவும். நான் அதிகாரம் செலுத்தும் தொழில்களில் நீங்கள் தற்போது இருந்தால் மெல்ல வேறு தொழிலுக்கு (உங்கள் ஜாதகத்தில் நல்ல நிலையில் உள்ள கிரகம் காரகத்வம் வகிக்கும் தொழிலுக்கு) மாறிவிடவும்.
6. வீட்டின் நடுப்பாகத்தில் பள்ளம், உரல் இருந்தால் அப்புறப்படுத்தவும்.

2.சந்திரன் ஸ்பீக்கிங்:
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.
வடமேற்குத் திசை, வெண்முத்து, பிரமுகர்களின் மனைவியர், தாய், தாயுடனான உறவு, தாய்வழி உறவு, நுரையீரல், சிறு நீரகம், மனம், இரவு நேரம், முழுநிலா நாள், சஞ்சலம், தண்ணீர்த் தொடர்பான இடங்கள், தொழில்கள், யார் எவ்வளவு நேரம் இருப்பார்கள் என்று சொல்ல முடியாத இடங்கள் (உம்) நீச்சல் குளம், கல்யாண மண்டபம், காய்கறி மார்க்கெட், பேருந்து, ரயில் நிலையங்கள் முதலியன. படகு, கப்பல் பயணம், 15 நாட்கள் துள்ளல், 15 நாட்கள் துவளல், திடீர்ப் பயணம், கண்டதும் காதல், சீஸனல் வியாபாரங்கள், மக்களுடன் நேரடித் தொடர்புள்ள வேலைகள், நதி, நதிக்கரை, கடற்கரை, தாய் வயது பெண்கள், மதர்லி ஃபிசிக் கொண்ட பெண்கள் இரண்டேகால் நாட்களில் முடிந்து விடக்கூடிய வணிகங்கள், நண்பர்களுடனேயே மோதுதல்,எதிரிகளுடன் நட்பு கொள்ளுதல் இவற்றிற்கெல்லாம் சந்திரனாகிய நானே அதிபதி.

பரிகாரங்கள்

1. அமாவாசைக்குப் பின்வரும் 14 நாட்கள் நிலவொளியில் உணவருந்துங்கள் (அதாங்க நிலாச்சோறு).2. ஊஞ்சலாடுங்கள். மீன் தொட்டி வைத்து வண்ணமயமான மீன்களைப் பார்த்துக் கொண்டிருங்கள்.3. நான் அதிகாரம் வகிக்கும் தொழில்களில் ஈடுபட்டிருந்தால் மெல்ல கழண்டு கொள்ளுங்கள்.4. உங்களுக்குத் தூசு, டென்ஷன், புகை, உதவாது. சுத்தமான குடிநீரையே அருந்துங்கள்.5. ஆயுதம் தரிக்காத, சாந்தமான அம்மனை வணங்குங்கள். முக்கியமாய்க் கன்னியாகுமாரி அம்மன்.6. அருகம்புல் சாறை அருந்துங்கள்.7. சந்திரபலம் இருக்கும் நாட்களில் மட்டுமே முக்கிய முடிவுகளை எடுங்கள்.8. வாக்குக் கொடுக்காதீர்கள். காமராஜர் மாதிரி “பார்க்கலாம்” “பார்க்கலாம்” என்றே சொல்லிக் கொண்டிருங்கள்.9. கண்களின் தண்டனைக் காதல்வழி என்ற கவிஞரின் வைர வரிகளை மறக்காதீர்கள். நீச்சல், தலைக்குக் குளிப்பது, அதிக வெயில், அதிகக் குளிர் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள்.10. வடமேற்கில் சமையலறை கூடாது, பள்ளங்கள் கூடாது.

3. செவ்வாய் ஸ்பீக்கிங்:
மொதல்ல என்னோட காரகத்வங்களை பார்ப்போம்.
வயதில் இளையவர்கள் போலீஸ், மிலிட்டரி, ரயில்வே, எரிபொருள், மின்சாரம், ரத்தம், ஆயுதங்கள், வெடி பொருட்கள், எலும்புக்குள் வெள்ளையணுக்களை (நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராடுபவை இவையே – நோய்வராது காப்பவை) உற்பத்தி செய்யும் மஜ்ஜை. கோபம், நெருப்பு, தர்க்கம், வியூகம், தெற்கு திசை, பவழக்கல், சத்ரிய குலத்தினர், அறுவை சிகிச்சை, விபத்து, சமையல் இவை எல்லாவற்றிற்கும் நானே அதிபதி.சூட்டுக் கட்டிகள், ரத்தம், எரிச்சல் தொடர்பான வியாதிகள், போட்டி, ஸ்போர்ட்ஸ், என்.சி.சி. முருகக்கடவுள், பால், கொம்புள்ள பிராணிகள், மாமிசம், பலி இவையும் என் இலாகாவின் கீழ் வருபவையே.

பரிகாரங்கள்:
1. ரத்ததானம் பற்றி உங்களுக்கிருக்கும் பிரமைகளைப் போக்கிக் கொண்டு உங்கள் குடும்ப டாக்டரை கலந்தாலோசித்து வருடத்திற்கு ஒரு முறையாவது ரத்ததானம் செய்ய ஆரம்பியுங்கள். எப்படியும் ரத்த சேதம் உறுதி என்னும் போது ரத்த தானம் கொடுத்தால் விபத்து தவிர்க்கப்படும்.புண்ணியமும் வரும் அல்லவா?
2. நீங்கள் மாமிச உணவைத் தவிர்த்து நண்பர்களுக்கு ஆக்கியோ வாங்கியோ போடுங்கள் (காவல்துறை, மின்துறை ஊழியர்களுக்கு என்றால் உத்தமம்).
3. பள்ளிகள், நூலகங்கள், பள்ளி வாசல்கள், கோயில்கள், சேவை நிறுவனங்களுக்கு மின்சாதனப் பொருட்களைத் தானம் செய்யுங்கள்.
4. உங்களுக்கு உடற்பயிற்சி என்பது மிக முக்கியம். முடிந்தால் கராத்தே ஜுடோ போன்ற தற்காப்புக் கலைகளை பயிலுங்கள்.
5. உங்கள் வீடு (அ) வியாபார ஸ்தலத்தில் தெற்கு (அ) தென் கிழக்குப் பகுதியில் பள்ளங்கள் இருந்தால் முதலில் மூடிவிடுங்கள்.
6. மலை மேல் உள்ள சுப்ரமணியரை வழிபடுங்கள்.
7. தியானம் பயிலுங்கள். கோபம் என்பது கையாலாகாத்தனத்தின் வெளிப்பாடு என்பதை உணர்ந்து திறமையை வளர்த்துக் கொள்ளப்பாருங்கள்.
8. நான் அதிகாரம் செலுத்தும் துறைகளில் இருந்து விலகுங்கள். அவற்றிலிருந்து வரும் ஆதாயங்களைத் தவிர்த்துவிடுங்கள்.

4. ராகு ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.என் அதிகாரத்தின் கீழ் சினிமா, லாட்டரி, சாராயம், சூதாட்டம், நகல் தயாரித்தல், இருட்டில் செய்யும் வேலைகள், திருடு, கடத்தல், போலி சரக்குகளை விற்றல், ஏமாற்றுதல், சந்தேகம், ஸ்பெகுலேஷன், பங்குச்சந்தை, வரி ஏய்ப்பு, விஷம், ஆங்கில மருந்துகள், பொய் பேசுதல், பாம்புப்புற்று, துர்கை, கருப்பு மார்க்கெட், இடுப்புக்குக் கீழ்பாகத்தில் வைத்தியர்களுக்குப் புலப்படாத நோய்கள், பலஹீனங்கள், வயதுக்குத் தகுந்த வளர்ச்சியில்லாது போதல் (அ) ஊளைச்சதை, பிற மொழிகள் ஆகியவை வருகின்றன. பதுக்கல், திருட்டு, கணக்குக் காட்டுதல், பாம்புகள், விஷபிராணிகள், மெடிக்கல் ரியாக்ஷன், அலர்ஜி, கள்ளத்தோணியில் வெளிநாடு போதல் இவையும் என் அதிகாரத்துக்குட்பட்டவையே.

பரிகாரங்கள் :
1. புற்றுடன் இருந்து பிராமணரால் பூஜிக்கப்படாத அம்மனை வணங்குங்கள்.2. பிரெஞ்சு, ஜெர்மனி போன்ற மொழிகளை கற்க முயற்சி செய்யுங்கள்.3. விளையாட்டாய்க் கேமராவில் படம் பிடியுங்கள்.4. கொள்ளை, கடத்தல் தொடர்பான வெளிநாட்டுச் சினிமாக்களை பாருங்கள், நாவல்கள் படியுங்கள்.5. சீட்டாடக் கற்றுக்கொள்ளுங்கள், காசு வைத்து ஆடாதீர்கள்6. விளையாட்டாய் நஷ்டப்படவே மாதம் ஒன்றிரண்டு லாட்டரி டிக்கெட்டுகள் வாங்குங்கள்.7. பரமபதம் ஆடுங்கள்.8. படுக்கை அறைச் சுவரில் தலையணை, படுக்கை உறைகளில் ‘ட்ராகன்’ (பெரிய பாம்பு) ஓவியம் இருக்கும்படிச் செய்யுங்கள். ரப்பர் பாம்புகளைப் போட்டு வையுங்கள்.9. கிராமப்புறங்களில் பாம்பு நடமாடும் இடங்களுக்குப் போகாதீர்கள்.10. மாதம் ஒரு முறையாயினும் யாரேனும் ஒரு ‘பெரிசுக்கு’ ஒரு ‘கட்டிங்’ போடக் காசு கொடுத்து ஒழியுங்கள். 11.குடிப்பழக்கம் இருந்தால் மெல்லக் குறைத்துக் கொண்டே வந்து (தவணையில் விஷம் இது) நிறுத்தி விடுங்கள்.

5.குரு ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரகத்வத்தை பார்க்கலாம்.
நான் தங்கம், பைனான்ஸ், அரசியல், மதம், மதம் சார்ந்த நிறுவனங்கள், தேவஸ்தானங்கள், வடகிழக்குத் திசை அகியவற்றிற்கு அதிகாரி, நானே புத்திரக்காரகன், பௌத்திரக்காரகன் (பேரன்கள்), நீதிமன்றம், கரூவூலம், புஷ்பராகம், பிராமணர், சான்றோர், இதயம், வயிறு, ஞாபகசக்தி, புராணம், வேதம், சேவை நிறுவனங்கள், ஆட்சி மொழி, அரசு தரும் வீட்டு வசதி, காசாளர், கண்டக்டர், முன்யோசனையுடன் திட்டமிட்டு செயல்படுதல், இது எல்லாம் என் இலாகாவின் கீழ் வருபவை. தட்சிணாமூர்த்தி, சாயிபாபா, ஸ்ரீராகவேந்திரரர் ஆகியோரும் எனது பிரதி ரூபங்களே!

பரிகாரங்கள்:
1. வியாழக்கிழமை மஞ்சளாடை அணிந்து தட்சிணாமூர்த்திக்கோ வேறு எவரேனும் குருவுக்கோ விரதமிருங்கள்.2. தங்கத்தை லாக்கரில் வையுங்கள். 3. வட்டிக்கு ஆசைப்படாதீர்கள்.4. அஜீரணத்தைத் தவிர்த்து விடுங்கள்.5. பிராமண நண்பர்களுக்குச் சாப்பாடு போடுங்கள்.6. மஞ்சள் நிறப் பொருட்களை அதிகம் உபயோகியுங்கள்.7. கோயில், குளம், ஆசிரமம், திருப்பணி சேவைகளுக்குப் பணம் கொடுங்கள். ஆனால் நீங்கள் அங்கு செல்வதோ, ஈடுபாடு காட்டுவதோ வேண்டாம்.8. பெரிய மனிதர்களுடன் அளவோடு பழகுங்கள்.9. வங்கி, கோர்ட்டு, தேவஸ்தானங்களைத் தவிர்த்து விடுங்கள்.10. வெறும் வயிற்றில் வில்வ இலையை மென்று விழுங்குங்கள். 11. வடகிழக்கில் மேடு, படிகள், மாடிப்படிகள் இருந்தால் நீக்கி விடுங்கள்.

6. சனி ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரக்த்வத்தை பார்க்கலாம்.
ஒட்டிய கன்னம், கூன் விழுந்த முதுகு, உள் வாங்கிய கண்கள், கால்கள், பொறுமை, நீண்ட கால திட்டங்கள், விவசாயம், சுரங்கத்தொழில், எண்ணெய் செக்கு, எருமை, தலித் இன மக்கள், தொழிலாளர்கள், இரும்பு, கருங்கல், கிரானைட், எண்ணெய் வித்துக்கள், துர்நாற்றம், தூசு கிளப்பும் தொழில்கள், கைகள், உடைகளைக் கறையாக்கும் தொழில்கள், மக்களை கசக்கிப் பிழியும் தொழில்கள் (கந்துவட்டி-கொத்தடிமை), வழக்கறிஞர், பழைய பொருட்கள், ஸ்கிராப், மேற்குத்திசை, கருப்பு நிறம் இவற்றிற்கெல்லாம் நானே அதிபதி. சோம்பல், மந்த புத்தி, நரம்புகள், ஆசனம், மரணத் தொடர்பாய் கிடைக்கும் நிவாரணம் இவையும் என் அதிகாரத்தின் கீழ் வருபவையே. க்ளாஸ், போர் ஊழியர்கள், தொழிற்சங்கங்கள், கசப்பான பொருட்கள், அருவருப்பான பொருட்கள், தாமதம், நீண்ட ஆயுள், பிரிவு, துக்கம், அடிமையாதல், சிறைப்படுதல், மலச்சிக்கல் இவற்றிற்கும் நானே அதிகாரி.

பரிகாரங்கள்:
1. சமையலுக்கு நல்லெண்ணையையே உபயோகியுங்கள்.2. கருப்பு நிறத்தைத் தவிர்த்து, நீலநிற ஆடை, அணிகலன்களை அதிகம் உபயோகியுங்கள்.3. ஏழை மற்றும் இயலாதவர்களுக்குப் பழைய பொருட்கள் மற்றும் இரும்பு தானம் செய்யவும்.4. சென்ட், ஸ்ப்ரேயர் தவிர்க்கவும்.5. வேப்பிலை ரசம் குடிக்கவும். அகத்திக்கீரை, பாகற்காய் அதிகம் உணவில் சேர்க்கவும்.6. சனிக்குறிய ரத்தினம் நீலம். இதை தங்கத்தில் அணியக்கூடாது முடிந்தால் சனிக்குரிய உலோகமான இரும்பில் அல்லது சனிக்கு மித்திர கிரகமாகிய சுக்கிரனுக்குரிய வெள்ளியிலோ அணிவது நல்லது.மோதிரம், வளையம், டாலர் அணியவும்.7. குடியிருப்பது பழைய வீடாயிருந்தால், அதைப் பலப்படுத்திக் கொள்ளுங்கள். அலங்கரிக்காதீர்கள். 8. தோட்டம் போடுங்கள். பலன்களை தவிர்த்து விடவும்.9. என் ஆளுகைக்குட்பட்ட தொழில்களில் நீங்கள் இருந்தால் மெல்ல விலகி விடுங்கள்.10. தியானம் செய்யுங்கள். கிராமக் காவல் தேவதைகளை வழிப்படுங்கள்.11. யாரேனும் போலீஸ் ஸ்டேஷன், கோர்ட்டு, ஆஸ்பத்திரி, சுடுகாட்டுக்கு லிப்ட் கேட்டால் தயங்காமல் கொடுங்கள். பிரச்சினை வராது என்றால் துணையாகவும் போங்கள். 12. எதிலும் பெரிதாய் சுத்தம் சுகாதாரம் பார்க்காதீர்கள்.13. மேற்குத் திசையில் பள்ளம், காலியிடம் கூடாது.

7. புதன் ஸ்பீக்கிங்:
மொதல்ல என் காரகத்வத்தை பார்த்துரலாம்.
புதியவர்களைத் தொடர்பு கொள்ளும் திறமை, மனதிலிருப்பதை எதிராளிக்கு விவரிக்கும் திறமை, போஸ்டல், எஸ்.டி.டி. கூரியர், ஜோதிடம், ஏஜென்சி, கன்சல்டன்ஸி துறைகளில் வெற்றி ஆகியவற்றை வழங்குவது நானே. மனிதனின் தோல், ஆண்களுக்கு விரைகள், பெண்களுக்கு சினைப்பைகள் ஆரோக்கியமாக இருக்க உதவுவதும் நானே. கணிதத்திறமை, மருத்துவத்தொழில் வியாபாரத்துக்கும் அதிபதி நானே. முன்பின் அறிமுகமில்லாத இருவரைச் சேர்த்து வைக்கும் எந்த தொழிலும் என் அதிகாரத்துக்குட்பட்டதே. விற்பனை பிரதிநிதிகள், மார்க்கெட்டிங் ஊழியர்கள், திறமையான பேச்சாளர்கள் என் பலத்தில் ஜொலிப்பார்கள். கூட்டுறவு அமைப்புகள், அரசு சார் நிறுவனங்கள், கூட்டு வியாபாரங்கள், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் யாவும் என் அளுமைக்குட்பட்டவையே. கருத்தரங்குகள், நாடக அரங்குகள், பூங்காக்கள், கருத்துப்பரிமாற்றத்துக்கு உதவும் தெருமுனைக் கூட்டங்கள் யாவுக்கும் நானே அதிகாரி. ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் பஜார் தெருக்கள் என் ஆளுமைக்குட்பட்டிருக்கும். புத்திக்குழப்பம்- த்தப்பிரமையை தருவதும் நானே. தாய்மாமன், மாமனாருக்கும் காரகன் நானே.

பரிகாரங்கள்:
1. உங்களுக்குத் தேவையில்லாத விசயங்களைத் தெரிந்து கொள்ளாதீர்கள். பைத்தியத்திற்கு ஆரம்பம் தகவல் குழப்பம்தான்.2. யாருக்காகவும், யாரிடமும் தூது செல்லாதீர்கள்.3. வியாபாரம் வேண்டாம். 4. கூரியர், தபால், மூன்றாவது நபர்கள், தூதர்களை நம்பாதீர்கள், எந்தத் தகவலையும் நேரில் (அ) போனில் தெரிவியுங்கள்.5. க்ளப்புகள், சங்கங்கள், யூனியன்கள், உங்களுக்கு உதவாது. விலகியே இருங்கள்.6. தாய்மாமன்கள், மாமனார்கள் விசயங்களில் எச்சரிக்கை தேவை.7. ஜோதிடர்கள், மருத்துவர்கள், ஆடிட்டர்களை விட்டு விலகி யிருங்கள்.8. கள்ள உறவு உதவாது.9. தோல் வியாதிகள் இருந்தால் ஆங்கில மருத்துவத்தின் மூலம் அவற்றை அமுக்கப்பார்க்காதீர்கள். 10. மாணவர்கள் கணிதம், விஞ்ஞானத்தை முக்கியப் பாடமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.11. கண்ணனைத் துளசி மாலைப்போட்டு வணங்கவும், மரகதப்பச்சைக்கல் மோதிரம் அணியவும்.(தொடரும்)
8. கேது ஸ்பீக்கிங்:
நான் மோட்சக்காரகன். ஒவ்வொரு ஜாதகனையும் மோட்ச மார்க்கத்துக்குத்திருப்புவது என் கடமை. மனிதன் எப்போது மோட்ச மார்க்கத்துக்குத் திரும்புவான்? அவன் யாரையெல்லாம் ‘நம்மவர்’ என்று நம்பியிருக்கிறானோ அவர்கள் துரோகம் செய்ய வேண்டும். துரோகத்தால் விரக்தி ஏற்பட வேண்டும், விரக்தியால்தான் மனிதனை மோட்ச மார்க்கத்துக்குத் திருப்ப முடியும். புண்கள், சீலைப்பேன், அலைச்சல், வீண் விரயம், காரணமற்ற கலகம், வீடின்மை, சோறின்மை, உடுத்த உடையின்மை, நாடோடியாய்த் திரிதல், சன்யாசம், யோகம், வேதாந்தம், மனதில் இனம் புரியாத பீதி, மந்திர வித்தைகளில் ஈடுபாடு, யாரேனும் சூனியம் வைத்துவிட்டார்களா? செய்வினை செய்து விட்டார்களா? எனும் சந்தேகம், பாம்புப் புற்றின் அருகில் படுத்திருப்பது போன்ற அச்சம், நம்பியவர் யாவரும் கைவிட்டு விடுதல், வெளிநாடு செல்ல ஆசைப்பட்டுப் போலி நிறுவனங்களிடம் பெரும் பணத்தை இழத்தல், வெளிநாடுகளில் இருக்கும் போது பாஸ்போர்ட்டு, விசா தொலைதல், யுத்தம் அறிவிக்கப்படுவது, கலகத்தில் சிக்கிக் கொள்வது, வழி தவறி விடுவது இவற்றிற்கெல்லாம் நானே காரணம்.

பரிகாரம்:
1. எளிமையான வாழ்வு.2. சன்னியாசிகளுக்கு உணவளித்தல்.3. பிறமத வழிபாட்டுத்தலங்களுக்குச் செல்லுதல்.4. யோகம் பயிலுதல்.5. கூரையில்லாத விநாயகரை வணங்குதல்.6. வைடூரியம் பதித்த மோதிரம் அணிதல்.7. வாரத்திற்கு ஒரு நாளாவது காவி உடை தரித்தல்.8. சுபகாரியங்கள், பார்ட்டிகள், பிக்னிக், டூர் போன்றவற்றைத் தவிர்த்தல்.குறிப்புராகுவும் நானும் ஒருவருக்கொருவர் எப்போதும் சமசப்தமத்தில் அதாவது 180 டிகிரியில் இருப்பதால் ராகுதோஷம் இருப்பவர்கள் அதற்கான பரிகாரங்களோடு எனக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ளவேண்டும். அதேபோல் நான் அளிக்கும் தீயபலன்கள் குறைய, பரிகாரம் செய்து கொள்பவர்கள், ராகுவுக்குரிய பரிகாரங்களையும் செய்து கொள்ள வேண்டும். மேலும், நான்-செவ்வாயைப்போலும், ராகு-சனியைப்போலும் பலனளிக்க வேண்டும் என்பது இறைவன் கட்டளை. எனவே எங்களுக்குரிய பரிகாரங்களோடு, சனி, செவ்வாய் ஆதிக்கம் செலுத்தும் விசயங்களிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

9. சுக்கிரன் ஸ்பீக்கிங்:
வசதியான வீடு , வாகனம், அழகான மனைவி, படாடோபமான பர்னிச்சர், பட்டாடைகள், வாசனைப் பொருட்கள், நல்ல தூக்கம், அறுசுவை உணவு, நொறுக்குத் தீனிகள், நல்ல நடனம், சங்கீதம் எல்லாவற்றிற்கும் நானே காரகன். தின்றால் பசி தீரக்கூடாது, குடித்தால் தாகம் தீரக்கூடாது. இதுபோன்ற பீசா, கோக் வகையறாவுக்கும் நானே அதிபதி. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள், ஏசி அறை, ஸ்லீப்பர்கள், தென்கிழக்குத்திசை, எதிர்பாலினர், மர்ம உறுப்புகள், வெள்ளிச்சாமான்களும் என் ஆளுகைக்குட்பட்டவையே. கலா ரசனை,கலை நோக்கு, ஹேண்டி க்ராஃப்ட்ஸ், கலர் சென்ஸ் ,அழகு, அலங்காரம், டெக்ஸ்டைல்ஸ்,ரெடிமேட்ஸ்,ப்யூட்டிபார்லர் ஆட்டோ மொபைல்ஸ், ஹவுஸிங்க், ஹோம் நீட்ஸ், காஸ்மெடிக்ஸ், ஃபேன்ஸி, ஃபர்னிச்சர்,இசை , நாடகம், லாபம் தரும்.பெண்களை கவரும் பொருட்களின் வடிவமைப்பு, விற்பனை, ஹை க்ளாஸ் ரெஸ்டாரன்ட், டீ லக்ஸ் லாட்ஜு, ஸ்னாக்ஸ் சென்டர், ஸ்வீட்ஸ்டால், டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ் ரிலாக்ஸேஷன், பாஸ்டைம், விருந்து,பார்ட்டி எல்லாத்துக்கும் தான் நான் அதிபதி.
1. திருமணமாகாதவர்கள் பிரம்மச்சர்யம் கைக் கொள்ளவும். 2. திருமணமானவர்கள் மாதர் போகம் மாதம் இருமுறை என்பதை பின்பற்றவும்.3. ஆடம்பரம், படாடோபம், லக்ஜுரி, பேன்ஸி போன்றவற்றைத் தவிர்க்கவும்.4. முக்கியமாக வாகனங்களைத் தவிர்க்கவும்.5. சுமங்கலிப் பெண்களுக்குத் தாம்பூலம் வழங்கி (வசதியிருந்தால் வெள்ளி குங்குமச் சிமிழ்) அவர்கள் ஆசியைப் பெறவும். 6. ஆறு வெள்ளிக்கிழமை லட்சுமிப் பூஜை செய்யவும்.7. உறவுப் பெண்களுக்குச் சோப்பு, சீப்பு, கண்ணாடி, வளையல் பரிசளிக்கவும் (முறைப் பெண்களுக்கு அல்ல). 8. ஏழுமலையான் கோயிலுக்கு வெண்பட்டுச் சேலை சமர்ப்பிக்கவும். 9. வீட்டில் தென்கிழக்கில் பள்ளம், செப்டிக் டேங்க் இருந்தால் உடனே மூடி விடவும்.10. நடனம், சங்சீதம், இசை, அரட்டை, கச்சேரி, காஸ்மெடிக் சமாச்சாரங்களைத் தவிர்க்கவும்.

குறிப்பிட்ட ரவுண்டு பாசிட்டிவா நெகட்டிவான்னு எப்படி ஃபோர் காஸ்ட் பண்றது ? ரெம்ப சிம்பிள். உங்க வாழ்க்கையை பல கட்டங்களாக பிரிக்க உபயோகித்த அலகுக்குரிய கிரகம் எது –கோசாரப்படி அது எந்த பாவத்துல நின்னா என்ன பலன்? பாருங்க. அதைத்தான் அந்த ரவுண்டு தரும்.

உதாரணத்துக்கு என் உயிர் எண் 7 –அதிபதி கேது .என் வாழ்வை ஏழு ஏழா பிரிச்சா 42 வயசு முதல் 49 வயசு வரை ஏழாவது ரவுண்டு. இந்த கால கட்டத்துல நண்பன்,காதலர்/காதலி,பங்குதாரர்,மனைவி, தொப்புள்,ஆஃபீஸ் கொலிக்ஸ் ஆகிய ஏழாம் பாவ காரகங்கள்ள செம பல்பு .

பொதுவா சூரியன் ,செவ் , ராகு ,சனி,கேது கிரகங்கள் 3-6-10-11 ராசிகள்ள நிற்கும் போது நன்மை நடக்கும் தானே. இதே விதி இந்த புது டெக்னிக்லயும் இம்ப்ளிமென்ட் ஆகுதுங்கோ.

டிஸ்கி:
இதுக்கு மேல விளக்க என் மொழி போதாது / நேரமும் போதாது.ஆகவே அம்பேல் .புரியாதவிக கமெண்ட் பண்ணா புரிஞ்சவிக பதில் சொல்லி உதவவும்.

2 Replies to “ஏழு ஏழா உலக வாழ்வை : நீங்கள் கேட்ட விளக்கம்”

சிவராஜ்

02/05/2018 at 6:05 am

புரிந்து கொஞ்சம் குகுழப்பமாக உள்ளது

Reply

    S Murugesan

    02/05/2018 at 8:44 am

    Some body help Mr.Sivaraj.

    Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *