ஆறில் இருந்து அறுபது வரை (முன்னுரை)

அண்ணே வணக்கம்ணே !

ஆறில் இருந்து அறுபது வரை தலைப்புல – ஆறுவயசுல இருந்து அறுபது வயசு வரை தேவைப்பட கூடிய எல்லா ஜோதிட தகவல்களையும் 320 பக்கத்துல ஒரு புத்தகமா கொண்டு வரப்போறேன்னு அறிவிச்சதும் நூத்துக்கணக்கான பேர் முன் பதிவு செய்துக்கிட்டாங்க. அது என்ன நினைச்சு இந்த ஊரு நம்மை நம்புதோ தெரியல.

நாமளும் சேம் சைட் கோல் போட்டுக்கிட்டே இருக்கம். மொதல்ல விஜய தசமிக்கு ரிலீஸுன்னு சொன்னம் -இப்போ ஜனவரி 14 னு தள்ளி வச்சிருக்கம்.ஆனாலும் ஒரு சின்ன முனகல் கூட இல்லை. அந்த நம்பிக்கையில இன்னொரு சேம் சைட் கோல். நம்ம புத்தகத்துக்கு நாம எழுதின முன்னுரையை டிஸ்கி கணக்கா – நீ……………ள பதிவா போட்டிருக்கன்.

இதை படிச்சுட்டு சொதப்பறான்யாங்கற ஃபீல் ஏற்பட்டா -முன் பதிவு செய்தவிக இப்பவும் யு டர்ன் அடிக்கலாம் நான் ரெடி . நீங்க ரெடியா? இன்னைக்கே அடுத்து இன்னொரு பதிவும் போடப்போறேன். தலைப்பு: நூலின் உள்ளடக்கம் & நோக்கம்.

முன்னரைக்கு போயிரலாமா?

ஆறில் இருந்து அறுபது வரை என்ற பெயரை இந்த நூலுக்கு இட்ட போதே சுஜாதா கதைகளில் போல மனசுக்குள் கன்று குட்டி உதைத்தது .என்றாலும் தில்லு துரையாய் அறிவித்தாயிற்று.

பிறகு யோசிக்கும் போதுதான் இந்த தலைப்பு வாசகனுக்கு என்ன மாதிரி செய்தியை தந்திருக்கும் என்று யோசித்த போது உதறல் பிறந்தது. அதாவது ஒரு மனிதனுக்கு ஆறு முதல் அறுபதுவயது வரை ஜோதிட ரீதியாக தேவைப்படக்கூடிய அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய நூல் இது.இதை மட்டும் வாங்கி படித்து விட்டால் –படித்தவற்றை பின்பற்றினால் வாழ்வில் எதிர்படக்கூடிய எல்லா சிக்கல்களையும் அசால்ட்டாய் தவிர்க்கமுடியும் என்ற செய்தியை தந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

என் வரையில் நான் ஏதும் ஜோதிட கலையில் நிபுணனோ இன்னொன்றோ அல்ல. இன்றும் என் பரிசீலனைக்கு வரும் ஒவ்வொரு ஜாதகத்திலிருந்தும் ஏதேனும் ஒரு புது விஷயத்தை கற்றுக்கொண்டே தான் இருக்கிறேன்.

எல்லோரையும் போலவே நானும் ஜோதிட விதிகளை மனப்பாடம் செய்தவன் தான். சகட்டுமேனிக்கு அவற்றை அப்ளை செய்து பார்த்தவன் தான். ஆனால் அவ்வாறு அப்ளை செய்கையில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை பிறர் போல “லூஸ்ல விடாம” என் மூளையில் பதிந்து கொண்டேன்.

இந்த பதிவுகள் தொடர தொடர ஜோதிட விதிகளில் முக்கியமானவை எவை –முக்கியமற்றவை எவை என்பது தெளிவானது.

கிரக நிலையை வைத்து ஜோதிடர் கூறும் அனைத்து நற்பலன்களும் நடப்பதில்லை. அதே மாதிரி தீயபலன்களும் அனைத்தும் நடந்துவிடுவதில்லை. ஒரே கிரகஸ்திதி எந்த இருவருக்கும் ஒரே மாதிரியான பலனை தருவதில்லை.இந்த மேட்டரில் பூர்வ புண்ணியம், கடவுள் கருணை, அப்பா அம்மா நல்வினை, வாஸ்து இப்படி நிறைய ஃபேக்டர்ஸ் வேலை செய்யுது. நாம் ரெசிப்டிவாக மாறும்போது பிரச்சினை குறைகிறது. ரெபல் ஆகும்போது அது பல மடங்காகிறது.

ஒரு கிரகம் நான் இந்த ஒரு பலனை தான் தருவேனு அடம் பிடிக்கிறதில்லை. காம்பவுண்டுக்குள்ள குதிச்ச திருடன் சிச்சுவேஷனை பொருத்து பாய்லர் மூடியையாவது தூக்கிக்கிட்டு போறாப்ல தன் ஜூரிஸ்டிக்சனில் (காரகத்வம்) ஏதோ ஒன்றை அடித்து தூள் கிளப்பி விடுகிறது. அதே போல் தான் நின்ற பாவ காரகத்வத்தில் ஏதோ ஒன்றை நாறடித்து விடுகிறது. ( நெம்பர் ஆஃப் ஆப்ஷன்ஸ்) .

மேலும் உங்கள் அடுத்த கணம் இந்த கணத்திலான உங்கள் செயலை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இறைவன் மனிதனை சுதந்திரமாக வாழும்படி சபித்துள்ளான். ஃபைனல் கோல் நிர்ணயிக்கப்பட்டுள்ளதே தவிர தினசரி நிகழ்ச்சி நிரல் எல்லாம் நாட் ஃபிக்ஸ்ட்.

ஒரே ஜாதகத்தில் –ஒரே லக்னத்தில் (அதாவது குத்து மதிப்பாக சொன்னால் இரண்டு மணி நேரத்தில்) பிறக்கும் எல்லா குழந்தைகளின் வாழ்வும் ஒரே மாதிரி இருப்பதில்லை. நிமிடத்துக்கு 4 குழந்தைகள் என்றால் 120 நிமிடங்களுக்கு 480 குழந்தைகள் பிறக்கின்றன.ஆனால் அதில் ஒன்று தான் சூப்பர் ஸ்டாரோ –சூப்பர் ஆக்டரோ ஆகிறது மற்றவை? இவ்வளவு ஏன் இரட்டை குழந்தைகளின் வாழ்வும் கூட ஒரே மாதிரி இருப்பதில்லை.

இங்கு தான் பல்வேறு காரணிகள் நம் வாழ்வை பாதிப்பதை –பிரபாவிப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டி இருக்கிறது .

நம் வீடு –அதன் வாஸ்து –நம் பெற்றோர் –அவர் தம் வாழ்க்கை முறை –அவர்களின் எண்ணங்கள்-நம் சூழல் – ஆசிரியர்கள் – சக மாணவர்கள் –அவர்களில் நமக்கு நெருக்கமானவர்கள், இறை நம்பிக்கை ,அதன் ஆழம், அல்லது நாத்திகம் இப்படி பல அம்சங்கள் வாழ்க்கையை மடை மாற்றுகின்றன.

என்னதான் ஆயிரம் விதிகளை வகுத்து வைத்திருந்தாலும் ஜோதிடத்தில் ஒரு இருண்மை தன்மை இருக்கிறது .

எனவே ஜோதிடரானாலும் சரி – ஜாதகர்களானாலும் சரி ஜோதிட வியலை ஒரு வித பணிவுடனேயே அணுக வேண்டி இருக்கிறது .

வெறுமனே ஜோதிட விதிகளை மட்டும் வைத்து கொண்டு எந்திரத்தனமாய் –தட்டையாய் –ஒரு வித ஆணவத்துடன் அணுகும் போது எல்லா விதிகளுமே கை விட்டுகின்றன.

சரி படைப்பின் மீதான மஹா விஸ்வாசத்துடன் அணுகி எதிர்காலத்தை கணிக்க முடிந்து விட்டால் மட்டும் என்ன அற்புதம் நிகழ்ந்து விடப்போகிறது ? பரிகாரம் என்று டைவர்ட் ஆகி கோழி போனதோடு குரலும் போன கதையாகி விடுகிறது வாழ்க்கை.

நானும் பரிகாரங்களை பரிந்துரைக்கிறேன் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் நான் கூறும் பரிகாரங்கள் கிரகங்கள் தரவிருக்கும் கெடு பலனை நம் சமூக-குடும்ப வாழ்க்கை பாதிக்காத படி-ப்ரொஃபெஷ்னல் கேரியர் பாதிக்காத படி நமக்கு நாமே நடத்தி கொள்வதே.

உடைத்து சொன்னால் நம் ஜாதகம் நம்மை எப்படி வாழ அனுமதித்திருக்கிறதோ அப்படி ஒரு வாழ்வை அமைத்துக்கொள்வது.

கர்த்தருக்கு பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம். படைப்புக்கு எதிராய் செயலாற்றுபவனுக்கு இடையில் ஏற்படுவதே பயம். படைப்பு வகுத்த விதிக்கிணங்க நெகிழ்வு தன்மையோடு வாழ்பவன் அஞ்ச தேவையில்லை. அவனுக்கு ஞானம் கிடைத்துவிடுகிறது .அல்லது ஞானம் கிட்டி விட்ட காரணத்தாலேயே அவன் நெகிழ்வு தன்மையுடன் “ஆற்றோடு போகிறான்”

ஜோதிட விதிகள் –பரிகாரங்கள் எல்லாம் சரியே . ( நான் கூறும் லாஜிக்கல் ரெமிடீஸ் உட்ப்ட) ஆனால் ஓஷோ சொல்வதையும் நாம் மனதில் பதித்து கொள்ள வேண்டியிருக்கிறது .

“The life doesn’t care your preparations “

என்னை பொருத்தவரை நம்பிக்கைக்கும் –மூட நம்பிக்கைக்கும்,அறிவுக்கும் –உணர்வுக்கும், உணர்வுக்கும் உள்ளுணர்வுக்கும் வித்யாசம் புரிந்தவன். என்னை அறியாது என்னில் மூட நம்பிக்கைகள் புகுந்துவிடுமோ என்ற அச்சத்தில் பெரியாரை காப்பாக கொண்டவன்.

என் காதுக்கும்,கண்ணுக்கும் வருவனவற்றை தவறாது பரிசீலிப்பவன். ஆனால் என் அனுபவம் சொல்வதை மட்டுமே ஏற்பவன்.1990 மார்ச் மாதம் ப்ராக்டிஸ் துவங்கி 2009 வரையிலும் மக்களை நேரில் சந்தித்து முதலில் கடந்த காலத்தை கணித்து சொல்லி –அது டாலி ஆனால் மட்டுமே எதிர்காலத்தை கணித்து சொல்லி வந்த நிலையிலும் –பிறகு ஆன்லைன் ஜோதிட ஆலோசனையை வழங்கி வரும் நிலையிலும் நான் உணர்ந்து கொண்ட சங்கதி ஒன்றே.

ந‌வ‌கிர‌க‌ங்க‌ள் க‌ட‌வுளின் ம‌ந்திரிச‌பையில் ம‌ந்திரிக‌ளை போன்ற‌வையாகும். பிர‌த‌ம‌ர் ம‌ந்திரிக‌ளுக்கு இலாகா பிரித்து கொடுப்ப‌து போல் க‌ட‌வுள் பூமியில் உள்ள‌எல்லா விஷ‌ய‌த்தையும் 9 ஆக‌பிரித்து அவ‌ற்றின் மீதான‌அதிகார‌த்தை ஒவ்வொரு கிர‌க‌த்துக்கு கொடுத்துள்ளார். ஒரு கிர‌க‌ம் த‌ங்க‌ள் ஜாத‌க‌த்தில்
ந‌ல்ல‌நிலையில் இருந்தால் அத‌ன் இலாகாவில் உங்க‌ளை அடித்துக் கொள்ள‌ஆளிருக்காது. அதே கிர‌க‌ம் கெட்டிருந்தால் அத‌ன் இலாகாவில் நாய‌டிதான். இது ஜோதிட வியலின் ஸ்தூல சாரம்.

ஆனால் ஒரு மந்திரிக்கும் உங்களுக்கும் வாய்க்கா வரப்பு சண்டை இருந்தாலும் பிரதமர் உங்களுக்கு உதவ முனைந்து விட்டால் மந்திரியால் என்ன செய்யமுடியும்? ஆனால் கடவுள் என்ற பிரதமர் உங்களுக்கு உதவ முன் வந்துவிட்டால் அவரது ஒரே நோக்கம் “வெறுங்காவல் –கடுங்காவல் தண்டனைகளை ஒரே டெர்மில் அனுபவிக்க செய்து விரைவில் விடுதலை செய்வதே.

அவர் உங்களுக்கு உதவ முன் வந்து விட்டால் எவனோ எனக்கு சூனியம் வைத்து விட்டான் என்று பதறிப்போகும் அளவுக்கு வாழ்க்கை நிலை மாறிவிடும். காரணம் இறைவனின் கேரக்டர் அப்படி. இறைவனின் கேரக்டரை புரிந்து கொண்டவர் யாரும் – உலக வாழ்வை பிரதானமாக கருதும் யாரும் முழு நாத்திகர்களாக மாறிவிடுவார்கள் .

ஆனால் உலக வாழ்வு ஒரு விசித்திரமான சூதாட்டம். இங்கு அனைவரும் தோற்றுத்தான் போக போகிறோம். அதிகம் வென்றவன் அதிகமாய் இழப்பான். குறைவாய் வென்றவன் குறைவாய் இழப்பான். நான் மரணத்தை சொல்லுகிறேன்.

எந்த மந்திரி நமக்கு ஃபேவர் செய்வான் என்று தலைமை செயலகத்தை சுற்றி அலைவது ஒரு முறை. நேரடியாக பிரதமரை சந்தித்து உதவி கோருவது ஒரு முறை . மந்திரி ஃபேவர் செய்வது என்பது நம் கருமங்களை கூட்டும். பிரதமர் ஃபேவர் செய்வது என்பது நம் கருமங்களை அழித்து பிறவாமையை தரும்.

இங்கு அனைத்து உயிர்களும் முக்திக்கு தகுதியானவையே. முக்தி என்றால் பிறப்பு –இறப்பு என்ற சக்கரத்தில் இருந்து விடுபடுவது . ( இந்து மதம் கூறும் முப்பது முக்கோடி தேவர்களும் இப்படி விடுதலை பெற்றவர்களே என்றும் ஒரு கருத்து உண்டு)

விடுதலைக்கு இருக்கும் ஒரே வழி நம் பூர்வ கருமங்களை அனுபவித்து தீர்த்து விடுவதே. இதை சாத்தியப்படுத்தும் வாழ்வைத்தான் நாம் வேண்டி விரும்பி கேட்டு பெற்று வந்திருக்கிறோம். அடுத்து வரும் கவிதையின் ஒரே ஒரு பத்தி இதை பாய்ண்ட் டு பாய்ண்ட் சொல்கிறது. முக்தியை சாத்தியப்படுத்தும் வாழ்வை தரக்கூடிய கிரக ஸ்திதிக்காக பல்லாயிரம் ஆண்டுகள் கூட காத்திருந்து இந்த பிறவியை எடுத்திருக்கிறோம். ஆக உங்கள் ஜாதகம் உங்கள் தேர்வு தான். உங்கள் ஜாதகப்படி விதிக்கப்பட்ட வாழ்வை வாழ்ந்தால் பிறவாமை மட்டுமல்ல – இந்த பிறவியிலான வாழ்வும் சுமுகமாக அமைந்து விடும் (கவனிக்க சுகமாக அல்ல சுமுகமாக)

//நீ ஒரு நல்ல இயக்குனன்
கடந்த பிறவியில் பூத உடலிழந்து
ஆன்ம வடிவில் அழுது அரற்றி
நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த
கதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்
இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை
சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம் //

இப்போது கவிதையை படியுங்கள். சினிமா கிசு கிசு கணக்காய் “தவ்வி” சென்றால் புண்ணியமில்லை. இந்த கவிதையின் ஒவ்வொரு பத்தியும் என் இருபதாண்டு கால தவ வாழ்வின் பலன். உயிரை பணயம் வைத்து நான் பெற்ற அனுபவங்களின் சாரம். கவிதையை படித்து விட்டு முடிவு செய்யுங்கள்.

நீங்கள் அறிந்து கொள்ள –அணுக விரும்புவது இறைவனையா? நவகிரகங்களையா? இந்த நூலின் மூலம் நவகிரகங்களை –அவற்றின் பாதிப்புகளை தெரிந்து கொள்ளத்தான் போகிறீர்கள். ஆனால் இவையாவும் அந்த கால கணக்கு நோட்டில் வலதுபக்கம் பெரிய மார்ஜினில் செய்யும் ரஃப் ஒர்க் போன்றவை .2ஜி வழக்கில் 1.76 பக்கத்தில் சங்கிகளும் –குடுமிகளும் போட்டுக்கொண்டே போன பூஜ்ஜியங்கள் மாதிரி. சிபி ஐ நீதிமன்றம் 1.76 என்ற எண்களை ரத்து செய்துவிட்ட்து. இதன் விளைவு ? குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை.

இறைவன் நினைத்தால் – நீங்கள் வாய்தா கேட்டு அலையாமல் இருந்தால் குறுகிய காலத்திலேயே விடுதலை நிச்சயம். ஆனால் கிரகங்கள் –பரிகாரங்கள் (யாகம்-ஹோமம் இத்யாதி) வாய்தாக்களை வாரி வழங்கலாம்.ஆனால் மெரீனாவில் புதைத்து விடும். புதைத்ததை தோண்டி எடுத்து குற்றவாளி என்று அசிங்கப்படுத்தும்.

கவிதைக்கு போயிரலாமா?

இறைவா !
நீ அழுத்தக்காரன் .உன்னை நீ வெளிப்படுத்திக்கொள்வதே இல்லை
நான் நெஞ்சழுத்தக்காரன் .உன்னை நான் வெளிப்படுத்தாது விடுவதாயில்லை 

நீ ராமனிலும் ராவணனிலும்
ஒரே நேரத்தில் செயல்பட்ட பொறி நீ
உன்னை பொறி வைத்து பிடிப்பதே எனது ஐம்பொறிகளுக்கு 
நான் கொடுத்துள்ள செயல் திட்டம்

புராண புருடாக்களையும் மீறி படைப்பின் ஒரே புருஷன் நீ என்று உணர்கிறேன்
பௌராணிகர்கள் புராண புருஷன் என்றாலும்
ஜோதிடர்கள் கால புருஷன் என்றாலும் 
நீ சிங்கிளாக இருக்கும் சிங்கம் என்று அவதானிக்கிறேன்

ஒரே சத்தியத்தை வெவ்வேறானதாய்,புதிதே போல் 
வெவ்வேறு ஆசாமிகளுக்கு வெளிப்படுத்திய உன் கற்பனை வளம் பேஷ் !
அதானால் ஆனது உலக அமைதி ஸ்மாஷ் !

“பிட்டா பிடி” என்று நீ அவ்வப்போது கொடுத்த சூசகங்களை 
சூட்டிகை தனத்துடன் செட்டாக்கி படித்தவன் நான் 

இறைவா ! எங்கும் உறைபவா !
என் முக விலாசத்தை எம் அக விலாசத்தில் ஒளித்தவா !

ஓருயிராய் இறங்கி வந்து பல்லுயிராய் பிரிந்து எம்மில்
ஒளிர்ந்தவா !

நீ உலகச்சிறையில் ஜெயிலராக இருக்கிறாய்
ஆயுள் தண்டனை கைதிகளுக்கு
ஆர்டர்லி பதவி கொடுத்து என் போன்ற
பிக்பாக்கெட்டுகளுக்கு டின் கட்ட வைக்கிறாய்
இது உனக்கு ஃபன் ! இதன் பின்னான காரணம் எங்கள் ஸின் !

நீ ஒரு நல்ல தகப்பனை போல் இருக்கிறாய்
கெட்ட குமாரர்கள் வீடு திரும்பும்போது விருந்து வைக்கிறாய்
உன்னை அண்டியே வாழ்ந்த எம்மை உண்டியில்லை உனக்கு
பட்டினியே மருந்து என்கிறாய்

நீ என் கப்பலின் தலைவன்
ஓட்டை வழியே கடல் நீர் குபு குபுக்கும்போது
கப்பலையே காலி செய்கிறாய் 
நான் உன்னை மெட்ராஸ் பாஷையில் வைதாலும்
செவிடனாய் நடிக்கிறாய்

ஆம் நீ ஒரு செவிடன் 
உனக்காக எத்தனை எத்தனை கச்சேரிகள்

நீ ஒரு ஊமை 
உன் மவுன மொழிக்குத்தான் எத்தனை எத்தனை அகராதிகள்

நீ ஒரு அம்பயர்
விளையாட்டு வீரர்கள் உன்னை பணியும்போது
பாப்கார்ன் சாப்பிடுகிறாய்
அவர்கள் உன்னை புகழ்ந்து பாடும்போது
காது குடைகிறாய்
இவர்கள் எதையேனும் ஆட முற்படும்போது
ஆயிரம் கண்களுடன் பார்க்கிறாய்

இறைவா !
நீ ஒரு நல்ல செவிலித்தாய்
ஒவ்வொரு முறையும் நான் பிரச்சினைகளால்
பிரசவிக்கப்படும்போது
தலை கீழாய் தொங்க விட்டு
புட்டத்தில் அறைகிறாய்

இறைவா !
நான் அனுபவப்பள்ளிக்கு போக மறுத்து அடம் பிடிக்கும்போதெல்லாம்
என் சட்டைப்பையில் ஒரு ASA சாக்லெட்டை திணித்து ஆசை வாகனத்தில் ஏற்றுகிறாய்

மரணத்தின் நிழல் கூட மனிதர்களை விரட்டுவது போல்
உன் குறித்த கற்பனைகள் கூட சிதறிக்கிடக்கும் என் சிந்தனைகளை
திரட்டுகின்றன

நழுவும் காலமானாய். ஒரு நாள் நானும் காலமாவேன் 
என்று புரிவித்தாய்
காதலியர் விழி மொழியறியவே அகராதி தேடிய எனக்கு
உன் மொழியற்ற மொழியும் புரியும் நிலை தந்தாய்
என்னில் நிகழும் ரசவாதத்தை கணிணிக்கு ரைட் செய்யும்
கலை தந்தாய்

கனவாய் கலைந்தாலும் விடியல் கனவாய் நாள் முழுக்க இதம் தந்தாய்
உன் பாதம் பணிதலும்
உனை ஏற்றி புகழ்தலும் வெற்று என்று ஒற்றறிந்த பின்னும்
நன்றி என்ற வார்த்தையின் கனம் போதாதோ என்ற தலைகனத்தில் கர்த்தாவே
உன்னை கவிதையில் கனம் பண்ணுகிறேன்

நான் தட்டாமலே திறந்தாய்
நான் கேளாமலே தந்தாய்

அதற்கொரு நன்றியுரைக்கும் மடமையையும் தந்தாய்

நீ ஒரு ஆசிரியன் . 
கடைசி வரிசைக்காரர்களை கண்டு கொள்வதே இல்லை
முன் வரிசையில் இருக்கும் என்னை முட்டிக்கு முட்டி தட்டுகிறாய்

நீ ஒரு பொற்கொல்லன்
தகரங்களை புறந்தள்ளி தங்கங்களைத்தான் சுடுகிறாய் 
நீ ஒரு ரசவாதி இரும்புகளை தங்கமாக்குகிறாய்
தங்கங்களை ஈயமாக்கி இரும்புகளின் முன் இளிக்க வைக்கிறாய்

நீ ஒரு சதிகாரன்
உன்னை மறக்கடிக்கும் பலதையும் எமக்கு நினைவூட்டி
உன்னை நினைவுறுத்தும் சிலதையும் நினையாது அம்னீஷியாவுக்கு
அடிகோலுகிறாய்

நீ ஒரு நல்ல நடிகன்.
நயவஞ்சகர்களிடம் இளித்தவாயனாய் நடந்து கொள்கிறாய்
அவர்களை அழிவுப்பள்ளத்தாக்கை நோக்கி செலுத்துகிறாய்

துவைத்த துணிகளை வெள்ளாவியில் வைத்து சுடுகிறாய்
அழுக்கு துணிகளையோ வெள்ள நீரில் நனைக்கிறாய்

நீ ஒரு விவரமான சவரத்தொழிலாளி
ஒருவனுக்கு உபயோகித்த அனுபவ ப்ளேடை மற்றொருவனுக்கு
உபயோகிப்பதே இல்லை

நீ ஒரு நல்ல வங்கி காசாளன்
எம் கணக்கில் காசு இருந்தால் நீ கொடுக்காதிருப்பதில்லை
உனக்கு முகமன் கூறாவிட்டாலும்

நீ ஒரு நல்ல இயக்குனன்
கடந்த பிறவியில் பூத உடலிழந்து
ஆன்ம வடிவில் அழுது அரற்றி
நாங்கள் முக்தியே நோக்கமாய் எழுதிக்கொடுத்த 
கதைக்கு தான் திரைக்கதை எழுதி இயக்குகிறாய்
இன்றோ புக்தியை நோக்கமாய் கொண்டு உன்னை
சகட்டு மேனிக்கு சவட்டுகிறோம்

நீ ஒரு நல்ல நீதிபதி
நீ வழங்கும் பிறருக்கான தீர்ப்புகள் 
பத்தாம் வாய்ப்பாடு தனமாய் புரிந்து விடுகின்றன

நீ மோசமான நீதிபதி (?)
எனக்கான உனது தீர்ப்புகள் மட்டும் புரிவதே இல்லை
அல்ஜீப்ரா கணக்காய்

எச்சரிக்கை:

கவிதை என்றாலே நம்மவர்களுக்கு மைன்ட் ப்ளாக் ஆகிவிடும். எனவே சக ஜோதிடர்களுக்கும் –ஜோதிட மாணவர்களுக்கும் –ஜோதிட ஆர்வலர்களுக்கும் நான் சொல்ல நினைப்பதை ஒன்று இரண்டு என்று வரிசைப்படுத்திவிடுகிறேன்.

1.பிறவாமை என்ற பெருவரத்தை பெறத்தான் – பூர்வ கருமங்களை தொலைக்கத்தான் இங்கே வந்திருக்கம். அதுக்கேத்த வாழ்க்கை -அந்த வாழ்க்கை அமைவதற்கு ஏற்ற கிரகஸ்திதிகள் வர சிலர் பல்லாயிரம் ஆண்டுகள் கூட காத்திருந்து தான் இந்தபிறவியை எடுத்திருக்கிறோம்.

2.பெயர்,புகழ்,பொன் பொருள் எவ்ள கிடைக்குதோ அந்தளவுக்கு ஆயுள் குறையும். கருமம் கூடும் .அல்லது பூர்வ புண்ணியம் கழிஞ்சு போயிரும். அவப்பெயர் ,வறுமை , நிராகரிப்புகள் எந்தளவுக்கு கிடைக்குதோ அந்தளவுக்கு பூர்வ கருமம் கழியும்.

3.எம்.ஜி.ஆர் பட வசனம் போல நீதி -நேர்மை -நியாயம்லாம் பின்பற்றி ஈட்டும் பொன் பொருளே நம் ஆயுளை குறைக்கும் -கருமத்தை கூட்டும் -பூர்வ புண்ணியத்தை குறைக்குமென்ற நிலையில் கூட்டி கொடுத்தும் -காட்டி கொடுத்தும் பெறும் பொன் பொருள் என்னெல்லாம் செய்யும்? யோசிங்க.

4.வே.விக்கள் கூறும் பிரம்மம் தன்னை இந்த பிரம்மாண்ட படைப்பாக வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறது . இந்த படைப்பின் பிரம்மாண்ட்த்தோடு ஒப்பிடும் போது நாம் எம்மாத்திரம். இந்த படைப்பில் இருந்து நம்மை வேறு படுத்தி பார்த்துக்கொள்வதும் –நம்மை மையமாக வைத்தே அனைத்தையும் சிந்திப்பதும் –செயலாற்றுவதும் எப்பேர்ப்பட்ட மடமை ?

5.தந்தையிடமிருந்து விடுபட்டு – தாயின் முட்டை கருவை துளைத்த கணம் முதலே நம்மில் வளர் -சிதை மாற்றம் ஏற்பட ஆரம்பித்துவிட்டது. அஃதாவது வடிவேலு காமெடி போல செத்து செத்து விளையாட ஆரம்பித்துவிட்டோம். மரணம் என்பது நம்மை துரத்தி கொண்டே இருக்கிறது .இதனால் இருட்டு -பசி- தனிமை -வறுமை -தூரம்-நிராகரிப்பு இப்படி சின்ன சின்ன விஷயங்களையும் சப் கான்ஷியஸாய் மரணத்தோடு முடிச்சிட்டு இவற்றில் இருந்து தப்ப துணை -காதல்-செக்ஸ் உதவும் என்று இவற்றிற்காகவும் / செக்ஸ் ஏறக்குறைய தடை செய்யப்பட்டிருப்பதால் இதற்கு மாற்றாய் பணத்தை உருவகித்து கொண்டு பணத்தை துரத்தியபடி வாழ்வின் வெற்றி தோல்விகளை பணம் ஒன்றால் மட்டுமே அளவிட்ட படி கருமங்களை கூட்டி -பூர்வ புண்ணியங்களை எல்லாம் இழந்து மீண்டும் பிறவிச்சக்கரத்தில் சிக்கி கொள்கிறோம். இதை விட முட்டாள்தனம் வேறேதும் உண்டா?

இவற்றை எல்லாம் உணர்ந்து நம் விதியை நாம் தெரிந்து கொண்டு விதி வகுத்த பாதையில் பயணிக்க வேண்டும் என்ற சங்கல்ப்பம் உங்களுக்கு ஏற்பட்டு விட்டால் அண்டை வெளியின் அகன்ற பாத்திரத்து அமுதம் உங்கள் மீது சொரிய ஆரம்பித்துவிடும்.

எதிர்காலம் தரிசனமளிக்கும். உங்கள் வாழ்வை உங்கள் விதிப்படி அமைத்துக்கொள்ளலாம். பூர்வ புண்ணியங்களை விரயமாக்கிவிடாமல் -பூர்வகருமங்களை எல்லாம் ஒழித்து பிறவாமை என்ற பெருவரத்தைபெற்றுவிடலாம்.

அவ்வாறன்றி ஒரு வேலை வாய்ப்பு – ஒரு திருமணம் -சொந்த வீடு – லக்சரி கார் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் ஜோதிடத்தை அணுகினால் அது கண்ணா மூச்சி காட்ட ஆரம்பித்துவிடும்.

வேண்டுகோள்:

முன்னுரையில அட் ராக்ட் ஆகி உடனே விலை விசாரிக்க ஆரம்பிச்சுராதிங்க. ஆயிரம் பக்கத்தை 500 பக்கமாக்கறது ரெம்ப ஈசியா இருந்தது. இந்த 500 ஐ 320 ஆக்கறது தான் மலையாயிருச்சு. ஜனவரி 14 அன்னைக்கோ ஒரு நா முன்ன பின்னயோ புஸ்தவம் கைக்கு வந்த பிறகு விவரம் சொல்றேன். அப்ப பேசிக்கலாம்.

உடுங்க ஜூட்டு

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *