Quantcast
திமுக இணைய தள அணி : சில யோசனைகள்: 1 – அனுபவஜோதிடம்

திமுக இணைய தள அணி : சில யோசனைகள்: 1

திமுக வெற்றி என்ற செய்தி சொல்லப்பட்டதுமே கட்சி போச்சு என்றாராம் அண்ணா. இந்தியாவுக்கு சுதந்திரம் அறிவிக்கப்பட்டதும் காங்கிரசை கலைத்துவிடுவோம் என்றாராம் மகாத்மா.

இரண்டிற்கும் பெரிய வித்யாசம் இல்லை. பௌராணிகர்கள் பார்வையில் சொன்னால் ஒரு அவதாரத்தின் நோக்கம் நிறைவேறியதும் விஷ்ணு வைகுந்தம் ஏகி விடவேண்டும். இல்லாவிட்டால் ராவண சம்ஹாரத்துக்காக வந்த ராமாவதாரம் அதற்கு பிறகு எப்படி எல்லாம் “மொக்கை”ஆனது என்று நீங்கள் அறிவீர்கள்.

ஒரு இயக்கம் தன்னெழுச்சியாய் தோன்றுகிறது விசுவரூபம் எடுக்கிறது (ஜல்லிக்கட்டு போராட்டம்) .அது வெற்றி திசையை நோக்கி நகரும் போதே பல சக்திகள் அதை கபளீகரம் செய்ய ஊடுருவி விடுகின்றன.( லாரன்ஸ் சாப்பாடு போட்டது ). இயக்கம் உதிரியாய் இருக்கும் போதே இந்த நிலை .அது நிறுவன மயம் ஆனால்?

ஷேர் மார்க்கெட்டில் புதிதாய் நுழைந்த நிறுவனம் போல் ஆகிவிடுகிறது அந்த இயக்கம். உடனே லாப நோக்குடையவர்கள் அதில் முதலீடு செய்ய பறப்பார்கள். ஒட்டகம் முகம் நுழைத்த கூடாரமாய் ஆகிவிடுகிறது அந்த இயக்கம்.

திமுக ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல. பெரியார் -அண்ணாவின் தயாரிப்பாக கலைஞர் இருந்ததால் இத்தனை எதிர் மறை சூழலிலும் அதை உயிரோட்டத்துடன் வைத்திருந்தார். மு.க.ஸ்டாலின் இதை தொடர்கிறார்.

தேர்தல் நெருங்கும் இந்த சமயத்தில் தினகரன் சொல்லும் சர்ஜரிக்கெல்லாம் இடமில்லை என்பது எனக்கு புரிகிறது . அதே சமயம் ஒலிம்பிக்கில் பங்கு கொள்ள இருக்கும் விளையாட்டு வீரன் கு.பட்சம் பேலியோ டயட்டையாவது பின்பற்றியே ஆகவேண்டும்.

இல்லை என்றால் இத்தனை காலம் பின்பற்றிய தவறான உணவு முறை -உடற்பயிற்சி இன்மை என்பது தோல்வி முகத்துக்கு தள்ளியே தீரும். திமுகவை என் போன்றவர்கள் ஆதரிக்கவும் – அதிமுகவை அவா உட்பட பல வலதுசாரி சக்திகள்,சாதீய சக்திகள் ஆதரிக்கவும் ஒரே காரணம் திமுக பெரியாரின் லெகசியை தொடர்ந்து க்ளெய்ம் செய்வதும் -அதிமுக அதை முழுக்க புறம் தள்ளியதுமே.

என்னதான் நிறுவனமயமாகி போனாலும் -என்னதான் சுய நல சக்திகள் ஊடுருவி விட்டாலும் கள வெற்றிக்காக கட்சி எத்தனை தான் தரை லோக்கலுக்கு இறங்கினாலும் அது பெரியார் -அண்ணா வழி வந்த முக்கிய கொள்கைகளில் உறுதியாய் நிற்கிறது .

திராவிட சிந்தனைகள் – மானில உரிமைகள் -சமூக நீதி -சுய மரியாதை இப்படி நிறைய சொல்லலாம். கள யதார்த்தத்தில் மேற்படி கொள்கை விஷயங்களில் புலிகள் சொன்னதை போன்ற தந்திரோபாய பின்நகர்வுகள் உண்டு . ஆனாலும் அதை திமுக மேற்கொள்ள காரணம் இங்கு அதன் ஒரே எதிரியான அதிமுகவுக்கு எவ்வித கொள்கைகளும் இல்லாததும் -அது மத்தியில் ஆளும்கட்சியுடன் எந்த விலை கொடுத்தும் எவ்வித சமரசத்துக்கும் தயாராக இருந்ததுமே.

நிற்க இணைதள அணி விஷயத்துக்கு வந்துவிடுகிறேன்.

மோடியின் வருகைக்கு பிறகு -அவரது ஒரு தலைபட்சமான ஃபோட்டோ ஷாப் பிம்பங்கள் வெற்றியை தந்த பிறகு எல்லா கட்சிகளும் அவசரம் அவசரமாய் இதை கட்டியமைத்து வந்தும் திமுக ஏனோ இதில் முனைப்பு காட்டவில்லை .இணையத்தில் தமிழ் ஈழ விவகாரத்தில் பல்பு வாங்கியும் ஒரு தலைப்பட்சமான /தர்க்கமற்ற வெறி கொண்ட தாக்குதல்களுக்கு இலக்காகியும் ஏதோ கலைஞர் /ஸ்டாலின் பெயர்களில் கணக்குகள் துவங்கப்பட்டு சில பல நிலை செய்திகள் பகிரப்பட்டனவே தவிர பெரிதாய் ஈடுபாடு காட்டவில்லை என்றே சொல்லவேண்டும்.

இதில் சோகம் என்ன வென்றால் அன்று தமிழ் இணையம் முழுக்க முழுக்க திராவிட எதிரிகள் பிடியில் இருந்தது. அவர்களின் மேம்போக்கான -அரை வேக்காட்டு தனமான – மனித குல வரலாறு / சாதி -மத – இனங்களின் மோதல் /சமத்துவம் -சமூக நீதி குறித்த பார்வையற்ற வாதங்கள் நன்றாகவே எடுபட்டன.

திராவிட எதிரிகள் மொன்னையாக சட்டம் ஒழுங்கு – வளர்ச்சி -ஊழல் எதிர்ப்பு இத்யாதியை தூக்கிப்பிடித்து திராவிட வரலாற்றை -திராவிட இன போராட்டத்தை -அந்த போராட்டத்தில் அது ஈட்டிய குறிப்பிடத்தக்க வெற்றிகளை அவுட் ஆஃப் ஃபோக்கஸ் செய்து நன்றாகவே விளையாடினார்கள்.
இதில் வரலாற்று பார்வை இல்லாத கள யதார்த்தம் புரியாத உலகளாவிய புலம்பெயர் தமிழர்களின் பங்கும் குறிப்பிடத்தக்கதே.

ஆனால் படிப்படியாக இணையத்தில் அவர்களின் பிடி தளர்ந்தது .இதற்கு காரணங்கள் பலப்பல. தமிழ்புலிகளின் மாயா வாதம் – அது ஏற்படுத்திய வரலாற்று சோகம் -யதார்த்தத்தின் கொடூரம் உலகளாவிய புலம்பெயர் தமிழர்களின் கண்களை திறந்ததாய் இருக்கலாம். மேலும் வலதுசாரிகள் -திராவிட இன எதிரிகள் கட்டமைத்த பிம்பங்கள் சிதறியதாய் இருக்கலாம்.

திராவிடத்துக்கு எதிராக திட்டமிட்ட தாக்குதல்கள் திட்டமிட்டு நிகழ்ந்து கொண்டிருந்த கால கட்டத்தில் திட்டமிடப்படாத எதிர்வினைகள் சுயம்புவாய் எழ ஆரம்பித்தன. படிப்படியாக திராவிட கொள்கையில் நம்பிக்கை -ஈடுபாடு கொண்டவர்களிடையே ஒரு வித ஒருங்கிணைப்பும் -ஒத்திசைவும் தோன்ற துவங்கின.

2016 தமிழக சட்டமன்ற தேர்தல் சமயம் திராவிட இன எதிரிகள் மிஸ்டர் பரிசுத்தங்களாக ம.ந.கூவை தூக்கிப்பிடித்து ஹிடன் அஜென்டாவுடன் (அதிமுக வெற்றி) அவதூறுகளை அள்ளி வீசிய போது திராவிட உணர்வாளர்கள் அதை திறம்பட எதிர்கொண்டனர். மெயின் ஸ்ட்ரீம் மீடியா ம ந கூ என்ற மாயாவாதத்தில் மயங்கி கிடந்த போது இணைய திராவிட ஆர்வலர்கள் அந்த மாயாவாதத்தை கிழித்து தொங்கவிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை நிகழ்ந்து கொண்டிருந்த போதே திருவாளர் மோடி ஜெ ‘வுக்கு வாழ்த்து சொல்லி ட்வீட்டி ஒரு செய்தியை கொடுத்தார் . காற்று திசை திருப்பப்பட்டது . கீழே விழுந்தாலும் மண் ஒட்டவில்லை கணக்காய் அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது .

2014 பாராளுமன்ற தேர்தல்களில் அதிமுக -திமுக பெற்ற வாக்குகளின் சதவீதம் முறையே 44.3% மற்றும் 26.8%. இது 2016 ச.ம தேர்தல்களில் 41 மற்றும் 40 சதவீதமாக மாறியது. வித்யாசம் வெறும் 1.1 சதவீதமே.

2009 -2014-2016 ஒவ்வொரு தேர்தலுக்கும் தமிழ் இணைய நுகர்வோரின் எண்ணிக்கை பெரிய அளவில் உயர்ந்து வருகிறது .இந்தியாவில் இணைய நுகர்வில் தமிழகம் இரண்டாம் இடத்தை பெற்றிருக்கும் இந்த சமயத்தில் திமுக இணைய தள அணி நிச்சயம் வரவேற்கத்தக்கதே. Better late than never !
அதே சமயம் இது கத்தியின் மேல் நடப்பது போன்றது . Back fire ஆகும் வாய்ப்புகள் யதேஷ்டம். இந்த கட்டுரையை படித்து யாரேனும் ஆர்வமாய் என் யோசனைகளை கேட்டால் அடுத்த பதிவில் விரிவாக தருகிறேன்.

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *