பெரியார் புராணம் : 2

அண்ணே வணக்கம்ணே !

பெரியார் பற்றிய நம் வீடியோ மீதான விமர்சங்களுக்கான எதிர்வினையா வாசகி திருமதி பானுகுமார் எழுதிய பதிவை படிச்சிருப்பிங்க. இது அதன் தொடர்ச்சி .

நீங்கள் ஒரு புறம் ஆன்மீகத்தையும் -ஜோதிடத்தையும் பேசிக்கொண்டே மறுபுறம் பெரியார் பற்றியும் பேசுவது தான் அவர்களுக்கு கடுப்பாகுது..பெரியார் மீதான பற்று உங்கள் பர்சனல்.அதை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை.அதை நீங்கள் பேசக்கூடாதுன்னும் அவர்களால் சொல்ல முடியாது.

அவர்களது இறை பக்தியை நாம் விமர்சிப்பது இல்லை…உங்களது கருத்துக்கள் பிடிக்கவில்லையா ..ஒதுங்கி கொள்ளட்டுமே…யார் வேண்டாம் என்றது?

பொழுது விடிந்து பொழுது போனால் எத்தனை எத்தனை சமய,மத,தெய்வ பிரசாரங்கள்…..நாத்திகம் பேசுபவர்கள் அதையெல்லாம் விமர்சித்துக் கொண்டா இருக்கிறார்கள்?அவர்களது கொள்கையும்,கருத்துகளும் அவர்களோடே…

இவர்களுக்கு ஏன் பெரியாரைப் பற்றி பேசினால் பொத்துக் கொண்டு வருகிறது?

பயம்….எங்கே உண்மை எல்லோருக்கும் விளங்கிவிடுமோ என்ற பயம்…எங்கே இவர்களது உத்தம வேஷம் கலந்துவிடுமோ என்கிற பயம்…சூத்திரர்கள் கோவிலுக்கு வராவிட்டால்….இவர்களால் கோவில்கள் எனும் வணிக மையங்களை நடத்த முடியுமா?
எத்தனை எத்தனை நம்பிக்கைகளை மக்களிடையே பிரபல்யப்படுத்துகிறார்கள்…குரு பெயர்ச்சியாம்,சனி பெயர்ச்சியாம்,ராகு கேது பெயர்ச்சியாம்,திங்கள் கிழமை சிவனுக்கு விளக்கு போடு,செவ்வாய் கிழமை துர்கைக்கு விளக்கு போடு,புதன் கிழமை பெருமாள் கோவிலுக்கு போ,வியாழக் கிழமை குருவுக்கு விளக்கு போடு,வெள்ளிக்கிழமை ராகு கால பூஜை,சனிக் கிழமை,சனீச்வரருக்கு தீபம்,ஞாயிற்று கிழமை சூரியனுக்கு தீபம்,,,,,

இதுல கொஞ்சம் வருமானம் குறைந்தால் இருக்கவே இருக்கு திருவிழாக்கள்…அதையும் யோசிச்சு யோசிச்சு செய்றாங்க,பூச்சொரிதல்,விளக்கு பூஜை…இத்தியாதி…

கோவிலுக்கு போனால் பூணூல் போட்டவருக்கு முதல் மரியாதை…பணம் படைத்தவர்களுக்கு ஒரு மரியாதை,அரசியல்வாதிகளுக்கு ஒரு மரியாதை….அப்பாவி மக்களுக்கு……?

இதுல எந்த கோவில் திரு விழா என்றாலும் அங்கு பூஜை செய்யும் அய்யர் குடும்பத்திற்கே அனைத்திலும் முன்னுரிமை.முதல்லே நான் கேட்கிறேன் அம்மாளுக்கு சாதாரணமா புடவை கட்டிவிட்டால் கட்டிக்க மாட்டாளா என்ன?மடிசார் தான் கட்டனுமா? .அதான் ஆச்சாரம்னா..அப்புறம் நாங்க எதுக்கு அனாச்சாரமா அங்கே வந்துகிட்டு உங்களைத் தீட்டாக்கிக்கிட்டு?

ஊஞ்சல் சேவையிலும் கணுபிடி அவாதான் போடனும் ..ஏன் நாங்க போட்டா அம்பாள் எழுத்து ஓடிடுவாளா?
சாமியைக் காட்டி சம்பாதிக்கும் இவர்களை விட சாமியை சாமியா நினைத்து கும்பிட்டு அது ஏதோ செய்யும் என்கிற நம்பிக்கையில் கோவிலுக்கு வரும் நாம் எந்த விதத்தில் குறைந்து விட்டோம்?

காசு தட்டில் போட்டாதான் பூவை சற்றே கிள்ளிக் கொடுப்பார்கள்..இதே அவர்கள் வீட்டு பெண்டுகள் வந்தால் சரம் சரமா போகும்….
அட ..நீ பூ கொடுப்பன்னு யாரும் தட்டில் காசு போடுவதில்லை…பிழைத்து போனு தான் போடுறோம்.
இதுல எந்த தானம் பண்ணாலும் பிராமணனுக்குத் தான் பண்ணனுமாம்…ஏன் மத்தவங்களுக்கு கொடுத்தால் தெய்வம் கோபித்து கொள்ளுமா?

“படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடும் கோயில் நம்பர்க்கு அங்கு ஆகா
நடமாடும் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அது ஆமே.”—இத நான் சொல்லலீங்க திருமூலர் சொல்லியிருக்கார்.

கோயில்கள் இரண்டு வகை. ஒன்று – மண், மரம், கல் போன்ற பொருள்களால் கட்டுவது. மற்றொன்று மனித உடல்.
படமாடம் என்றால், கூடாரம் என்று பொருள்.

பழங்காலத்தில் ஏதேனும் ஒரு வழிபாடு பொருளை வத்து, அதன்மீது துனி போன்ற பொருள்களால் கூடாரம் போன்று அமைப்பார்கள்.
அதனால் திருமூலர் படமாடக் கோயில் என்கிறார். இங்கே படமாடக் கோயில் என்பது, கட்டப்பட்ட எல்லாக் கோயில்களையும் குறிக்கும்.

‘நடமாடும் கோயில்’ என்ற சொற்களால் ஒரு பெரிய ஞானக் கருத்தை உணர்த்த விரும்புகிறார் திருமூலர்.

மனிதனே நடமாடும் கோயிலாக இருக்கிறான்.
“ உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிவார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் பலன் ஐந்தும் காளா மணிவிளக்கே…”
என்றும் சொல்கிறார் திருமூலர்.

மனித உடல்தான் மகேசனின் ஆலயம் என்பதை உணர்த்துவதற்காகதான், கோயில்கள் மனித உடல் அமைப்பில் கட்டப்படுகின்றன.
மனிதன் தனக்குள்ளேயே இறைவனை வைத்துக்கொண்டு, அவனை வழிபட வெளியே செல்கிறான்.

நடமாடும் கோயில், நடமாடாத கோயிலுக்குப் போகிறது.
உயிருடைய கோயில், உயிரில்லாத கோயிலுக்குப் போகிறது.
கோயில், கோயிலை வணங்குகிறது.

‘நடமாடும் கோயில்’ என்ற சொற்களில் இவ்வளவும் தொனிக்கிறது.
‘உனக்குள் இறைவன் இருப்பதைப் போலவே, உன் சக மனிதனுக்குள்ளும் இறைவன் இருகிறான். எனவே, இறைவனுக்கு நீ ஏதேனும் தர விரும்பினால், சக மனிதனுக்கு கொடு. அவனுக்கு உள்ளே இருக்கும் இறைவன் அதைப் பெற்றுக்கொள்வான்’ என்கிறார் திருமூலர்.

– கவிக்கோ அப்துல் ரகுமான்

அஷ்டோத்திர அர்சனைக்கு எத்தனை பேர் அத்தனையும் சொல்றாங்க…ஏன்னா அதெல்லாம் நமக்கு தெரிந்திருக்காது என்கிற நம்பிக்கை….சரி சொல்றாங்களே அதையாவது முழுமையா சொல்றாங்களானா அதுலையும் பாதி முழுங்கிடுவாங்க.
ஒரு சிலர் இதில் விதிவிலக்காக இருக்கலாம்.அவர்களது மனதை புண்படுத்தும் எண்ணம் எமக்கில்லை.

படித்த படிப்பும் ,கற்ற வித்தையும்(வேதமும்) மற்றவர்களுக்கு பயன்பட வேண்டுமே அன்றி அவர்களைப் புண்படுத்த அல்லவே அல்ல.இப்படி எந்த ஒரு மதமும்,சமய கோட்பாடுகளும் சொல்லித் தரவில்லை.

இப்படியெல்லாம் சொல்லி இவர்களைத் திருத்த முடியாது என்று தான் பெரியார் கடவுள் இல்லை இல்லவே இல்லை என்றார்.

கடவுள் என்பவன் சுட்டிக் காட்டும் பொருளல்ல….
உணரப்பட வேண்டிய உன்னதம்!!!

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *