பெரியார் புராணம் : 1

அண்ணே வணக்கம்ணே !

பெரியார் குறித்த என் பார்வையை வீடியோவா போட / அந்த அடக்கத்தை எழுத்தில் அடக்கியும் / வீடியோவுக்கு வந்த ஒரு சில விமர்சனங்களுக்கும் பதில் அளித்தும் திருமதி பானு குமார் இந்த பதிவை போட்டிருக்கிறார் . அன்னாருக்கு நன்றி.

எங்கள் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய ஐயா..திரு.சித்தூர்.முருகேசனாரின் ‘ பெரியார் புராணம்’ என்ற வீடியோ பதிவைப் பார்த்தேன்.அந்த பகுத்தறிவு பகலவனைப் பற்றிய அவரது கருத்துக்களைக் கேட்டேன்.அதைப் பற்றிய ஒரு தொகுப்பு!

//கடவுளை மற..மனிதனை நினை// என்று முழங்கிய அந்த மேதையைப் பற்றி பேசும் போது கடவுளைப் பற்றி பேசுவதைப் போல மனம் புளாங்கிதமடைகிறது என்கிறார்.

என்னவொரு இனிய முரண் பார்த்தீர்களா…

அவர் பெயரோ ராமசாமி… இராமாயணத்தை இவர் போல் கிழித்து தொங்கவிட்டவர்கள் யார்?
எல்லோரும் வாலிபத்தில் மணம் செய்வர்…இவர் தன் வயோதிகத்தில்-முரண்.
பகுத்தறிவு பெட்ட்டகம்…கடவுள் இல்லை இல்லவே இல்லை என்பவர்.ஆனால் ஒரு கோவிலின் அறக்காவலர்!…ஆத்திக செம்மல்களாலும் சரிவர செய்ய முடியாத…அந்த அறக்காவலர் பணியை ஒரு பணியாக மட்டுமே கொண்டு திறம்பட செய்து அறம் காத்தவர்.என்னவொரு முரண்!

இப்படியாக அடுக்கிக் கொண்டே போகலாம்..

கடவுள் இருக்கிறார் என்பவர்களால் தான் இன்று வன்முறை தலைவிரித்தாடுகிறது.ஆனால் இல்லை இல்லவே இல்லை என்றவர் சாத்வீகமாகவே தன் கொள்கைகளை தன் வாழ் நாள் முழுதும் முழங்கியிருக்கிறார்.

அவர் கடவுள் இல்லை என்று தான் சொன்னாரே தவிர மனிதன் இல்லை என்று சொல்லவே இல்லை..

சக மனிதர்களை,நண்பர்களை,அவர்கள் தன் கொள்கைக்கு எதிரானவர்களாக இருந்தாலும் மதித்து அவர்களுக்கு மரியாதை செய்தார்.
உ-ம்.தன் வீட்டிற்கு வந்த திரு.திரு.வி.க அவர்களது உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து அவர் பூஜை செய்வதற்காக தன் வீட்டில் பல காலமாக பூட்டிகிடந்த பூஜை அறையை சுத்தம் செய்து கொடுத்த பெரும் பண்பு அவருக்கிருந்தது.
இதையே ஒரு ஆஸ்திகர் தன் நாத்திக நண்பனுக்காக தன் வீட்டின் பூஜை அறையை மூடச் சம்மதிப்பாரா? அப்படியானால் அந்த நாத்திக கிழவனின் பெருந்தன்மை போற்றத்தக்கது தானே..

காஞ்சி சங்கராசாரியார் பெரியவா…இவர் பெரியார்…

காஞ்சி சங்கரச்சாரியார் வருகையின் போது தன்னைச் சேர்ந்தவர்களால் பிரச்சினை வராமல் நடந்து கொண்ட கண்ணியத்தை மற்றவர்கள் மறந்தாலும் சங்கராச்சாரியார் மறந்திருக்க மாட்டார் அல்லவா?

ஆமாங்க அவர் சிலையை உடைத்தார்….சிலையைத் தான் உடைத்தார்..ஏன் நீங்கள் தேடும் தெய்வம் அதில் இல்லை என்று காட்டுவதற்கே..

தூணை உதைத்த போது உக்கிரமாய் வெளிப்பட்டு இரணியனை வதம் செய்த தெய்வம்…இந்தக் கிழவனை ஏன் வாழவிட்டது? யோசியுங்கள்.

ராமர் படத்தை செருப்பால் அடித்தார்…சரி….கர்பகிரகத்துள்ளேயே அப்பாவி அபலைகளிடம் காமலீலைகள் செய்தானே ஒரு அயோக்கியன் அவனைவிடவா மோசமாக நடந்து கொண்டார்?

அவர் அடித்தது ராமரையானால் அவன் அம்பறாதுணியில் அம்புகள் இராமாயணத்தோடே தீர்ந்து விட்டனவா?
குதப்பிய வெற்றிலை எச்சில் தெறிக்க அவன் சாமிக்கு அர்ச்சனை செய்கிறானா இல்லை எச்சிலால் அபிஷேகம் செய்கிறானா…என்று குழப்பும் அர்ச்சகர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள்.

இன்றைய தேதியில் சரக்கடித்தால் தான் ஸ்ட்ராங்கா நின்னு பூஜை செய்ய முடியும் என்ற நிலையில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? கள் எதிர்ப்பு போராட்டத்தில் தனக்குச் சொந்தமான தென்னை மரங்களை வெட்டி சாய்த்தவர் இந்த சமத்துவப் பெரியார்.
மேற் சொனன விஷயங்களுக்காக கச்சை கட்டினால் கோவணம் கூட மிஞ்சாது..எல்லாவற்றிற்கும் ஆதாரம் இருக்கிறது.எங்கோ நடப்பதை,நடந்ததை எல்லாம் சொல்லக் கூடாது என்று வாதம் செய்தீர்களேயானால்..பெரியார் என்று பெயர் சொன்னாலே ஏன் பற்றி எறிகிறது?

அவர் தனக்காக சிந்திக்கவில்லை ஒட்டு மொத்த சமுதாயத்திற்காக சிந்தித்தார்.. வெறுமனே பிறப்பை காரணமாகக் காட்டி பஹுஜனங்களின் படிப்பை , வாழ்வாதாரத்தை சிலர் தொலைத்துவிடக் கூடாது என்று நினத்தார்.
இந்த மகத்தான பூமியில் பிறந்த ஒவ்வொருவருக்கும் தன் உரிமைகளைப் பெறவும்,மானத்தோடு வாழவும் உரிமையுண்டு என்று முழங்கினார்.அதற்காகவே போராடினார்.

//இட்டார் பெரியார்…இடாதார் இழி குலத்தார் பட்டாங்கில் உள்ளபடி//
இதைத் தான் அவரும் சொன்னார்.

பிரச்சினையின் ஆணி வேர் ஆண்டவனிடமே என்பதால் அதை கிள்ளியெறிந்தார்.
”அஹம்பிரம்மஸ்மி” என்றால் தனியா கோவிலும் ,குளங்களும் எதற்கு?அதற்கு உனக்கு எதற்கு காப்புரிமை?
உனக்குள் உள்ள கடவுள் மனிதனாகப் பிறந்த ஒவ்வொருரிடத்திலும் இருப்பார் தானே…கட…உள்… கடந்தால் காணலாம் கடவுளை
இது தானே கான்செப்ட்.

கடவுளை உருவகப்படுத்தி ஓராயிரம் பிரச்சினைகளை உள்ளே கொண்டு வருவதினால் தான் அவர் ஆணியே புடுங்க வேண்டாம் என்றார்.

அதென்னய்யா நீ திரை விலக்கினால் தான் நான் கடவுளை காணமுடியுமா?
//கல்லுக்குள் கடவுளை மந்திரித்து கொண்டு வர முடிந்த உன்னால் கேவலம் இந்த சூத்திரனை பிராமணன் ஆக்க முடியாதா// என்று கேட்டார்…பதில் இருக்கா உங்களிடம்?

கடவுளை மற என்று சொன்னதே மனிதனை நினை என்பதற்காகத் தானே..அப்புறம் எப்படி அவர் மனிதனை மிருகமாக்க முடியும்?
அதிலும் அவனது ஆத்மாவை எப்படி அவரால் கொலை செய்ய முடியும் ?பகவான் கிருஷ்ணரே சொல்லியிருக்கிறாரே…”ஆத்மா அழிவதில்லை”என்று அப்போ அவர் பொய் சொல்லிட்டாரோ…சரியா ரெஃபர் பண்ணுங்கப்பா!

அந்த நாள் முதல் இந்த நாள் வரை நீங்கள் தான் மற்றவர்கள் மீது உங்கள் கருத்துக்களை திணித்து வந்திருக்கிறீர்கள்…உங்களுக்கு எது சொளகரியமோ அதை மற்றவர்களைக் கொண்டு சாதித்து வத்திருக்கிறீர்கள்…அதை யாராவது திருத்த,மாற்ற முன்வந்தால் உங்கள் கும்பி கொதிக்கிறது.

இன்று நம்மிடையே அந்த பகுத்தறி பகலவன் இல்லை…ஆனால் அவரது பிரகாசத்தைக் கொண்டு ஜொலிக்க ஆயிரமாயிரம் நட்சத்திரங்கள் இங்கு உண்டு.திரு.சித்தூரார் ஜோதிடத்தை தொழிலாகக் கொண்டவர் தான்.ஆனால் முட்டாள்தனமான மூட நம்பிக்கைகளை மக்களிடையே விதைப்பதில்லை உங்களைப் போல்.

பெரியார் சொல்ல வந்ததும் இது தான்….சித்தூரார் சொல்வதும் இது தான்….

//பாசமுள்ள பார்வையிலே கடவுள் வாழ்கிறான்
அவன் கருணையுள்ள நெஞ்சினிலே
கோவில் கொள்கிறான் //

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.