வாசகி கடிதம் :2 ( ஆண் பெண் வித்யாசங்கள் நூல் விமர்சனம்)

Buvan 2

அண்ணே வணக்கம்ணே !

திரைக்கடலோடி தொடர் நிச்சயமா தொடரும் . நிறைய டேட்டா கலெக்ட் பண்ணி வச்சிருக்கன். வருவேன். தற்போதைக்கு நாம வெளியிட்ட “ஆண் பெண் வித்யாசங்கள் ” நூல் குறித்த விமர்சனம் /அதற்கு நான் தந்த விளக்கங்களை தொடர்ந்து அதே வாசகி மீண்டும் ஒரு மெயில் அனுப்பியிருக்கிறார்.

அதை கீழே படிக்க தந்திருக்கிறேன்.

நான் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடுவது உண்டு . ஆண் சாகும் வரை “விடலையாகவே” கூட வாழ்ந்து விடலாம். ஆனால் பெண் பிறக்கும் போதே “மன முதிர்ச்சியுடன்” பிறக்கிறாள் என்று .

வாசகியின் கடிதம் இதை மேலும் உறுதிப்படுத்துகிறது . வலி -வேதனைகளை வெளிப்படுத்தவும் ஒரு துணிச்சல் தேவைப்படும் பரிதாப நிலை பெண்களுடையது . அந்த துணிவை பாராட்டியே ஆகவேண்டும்.

இந்த கடிதத்துக்கு “கவுன்டர் “ஏதும் தந்துவிடாதீர்கள் என்று குறிப்பிட்டிருப்பதால் லூஸ்ல விட்டுர்ரன். அதே சமயம் என் கருத்தில் நான் உறுதியாக இருக்கிறேன்.

வீக்கர் செக்ஸ் தன் பலகீனத்தை அங்கீகரிப்பதே அதை மாற்றுவதற்கான முதல் படி . இவர் பெண்களை ஸ்ட்ராங்கர் செக்ஸ் என்று ஸ்தாபிக்க முனைவதும் இடை நிலை சாதியினர் தங்களை ஆண்ட பரம்பரை என்று ஸ்தாபிக்க முனைவதும் ஏறக்குறைய ஒன்றே.

அவர்கள் யதார்த்தத்தை புரிந்து -தம் மீது திணிக்கப்பட்டுள்ள இழி நிலையை உணர்ந்து – மேல் நிலை சாதியினர் இடையில் தங்கள் சுயமரியாதையை காப்பாற்றிக்கொள்ள முனைவதே தீர்வு .

வாசகியின் மெயில் உங்கள் பார்வைக்கு :

என் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய அன்பரே,
அன்பரே என்று நான் அழைத்தாலும் அண்ணே என்று தான் உங்களால் அழைப்பு விடுக்க முடிகிறது.என்ன தடுக்கிறது,யார் தடுக்கிறார்கள் என்று தெரியவில்லை.சரி அது போகட்டும்.

முதலில் என் குரலுக்கும் செவி சாய்த்து என் குமுறல்களை பதிவேற்றியதற்கு என் மனமார்ந்த நன்றிகள் பல.அன்பரே தங்களின் நிர்வாண உண்மைகள் என்ற வலைப்பூவில் தாங்கள் தொட்ட சில விஷயங்கள் என்னையும் தொட்டது.என்னுள் தங்கள் மீதான மரியாதையை,அன்பை அதிகமாக்கியது.இதோ நம் வலி உணர்ந்த ஒருவன் என ஈர்க்கப்பட்டேன்.

ஆண்களில் 90% பேருக்கு இது தெரிவதில்லை.தெரிந்தவர்களும் இது பற்றி அறியத்தருவதில்லை.உங்களை விதிவிலக்குஎன நினைத்தேன்…..ஆனால் விதி விளக்கிவிட்டது.எழுத்து வேறு எண்ணம் வேறு என்று.

கலைஞரின் ஆளுமைத் திறன் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்.ஆம் அவர் ஆளுநர் தான்,,,அத்தோடு
ஆணும் கூட.//ஆமாண்டா நான் அப்படித்தான்…இப்போ என்ன// என்று அவர் திருப்பி கேட்டால் அந்த கூட்டம் வாய் பொத்தி,வால் மடக்கி போய்விடும்.

ஆனால் பெண்கள் விஷயத்தில் அப்படி போய்விடுமா?நார் நாறாக கிழித்து போட்டுவிடாது?அதையெல்லாம் தாண்டி தான் அவள் உச்சம் தொட வேண்டியிருக்கிறது.உயிரியல்,உயரம் எடை,ஹீமோகுளோபின் இதிலெல்லாம் பெண் வீக்காம்.யார் சொன்னது?அவளது மெண்டல் கெபாசிடி,பிஸிக்கல் கெபாஸிடியின் அளவு தெரியுமா உங்களுக்கு?அவ்வளவு சீக்கிரத்தில் பெண் தோல்விகளால் துவண்டு விடுவதில்லை.அவளது மனோபலம் அளவிட முடியாதது.வலி தாங்கு திறன் என்றால் அவள் முன் உங்கள் சூப்பர் செக்ஸ்
ஒன்றுமேயில்லை.அது அதிசயமானது.

என்னை மிகவும் பாதித்த விஷயம் மிருகங்களுக்கும் மாதவிடாய் உண்டு,அவைகளும் தானே பிரசவிக்கிறது என்றீர்களே அது தான்.ஆம் மிகச் சரியாகச் சொன்னீர்கள்,,,மிருகங்களுக்கும் மாதவிடாய் உண்டு தான்.அவை சத்தமில்லாமல் கடக்கின்றன தான்.,,,
ஆனால் அவை தன் தேவைகளை மட்டுமே பூர்த்தி செய்து கொண்டு தேமேனு போய்விடுகின்றன.அதனால் அது ஒரு விஷயமே இல்லை.பெண் அப்படியா? அவளை அப்படியா வைத்திருக்கிறீர்கள்?

அவள் என்னவெல்லாம் அந்த நேரத்தில் செய்யவேண்டியிருக்கிறது?அதில் பெரிய அசெளகரியம் ஏதும் இருப்பதாக தெரியவில்லைஎன்று சொல்கிறீர்கள்?அது இயற்கை தானே என்கிறீர்கள்.இயற்கை என்றால் வலி தெரியாதா?மிக சிலருக்கு மட்டுமே அதை வலியில்லாமல் கடக்க முடியும்..ஆனால்90% சதவீத பெண்கள் வலியில் சுணங்கித்தான் போகிறார்கள்.வலி இல்லாதவர்கள் கூட அந்த தாரை ஒழுக்கில் தடுமாறி போகிறார்கள்.

நாப்கின் விளம்பரங்களை கவனித்தது உண்டா அன்பரே?அகலமானது, நீளமானது,அதிக உறிஞ்சு திறன் கொண்ட்து என ஏன் சொல்கிறார்கள்?மீண்டும் நினைவு படுத்துகிறேன்..

இரண்டு நாள் சளி பிடித்து கீழேயே குனியமுடியாமல் சதா மூக்கிலிருந்து வடியும் நீர் உங்களுக்கு அசெளகரியத்தை தரவில்லை?அதை நிறுத்த வைத்திய முறைகளை மேற்கொள்வதில்லை?என்னைக்கோ இரண்டு நாள் வரும் சளிக்கே இத்தனை பாடு….10 வயதில்(இப்போ அதிலும் சீக்கிரமா) ஆரம்பித்த- குறைந்தபட்சம் 55 வயது வரை தொடரும் இந்த வேதனையை நினைத்து பாருங்கள் சார்.

நீங்களும் பெண்னைப் பெற்றவர் தானே.//அதெல்லாம் சாதாரணம்..என் அம்மா,என் மனைவி,என் மகள் என எல்லோரும் அதை கடந்து தான் வந்தார்கள் ..வருகிறார்கள்.இது ஒரு பெரிய விஷயமா//என்று கேட்கலாம்.

இந்த விஷயத்தில் பெண்களைத்தான் குறை சொல்வேன் தன் வேதனைகளை அதுவும் இது போன்றவற்றை ஆண்களிடம் பேசுவதே தவறு.அவர்களுக்கு தெரியக்கூடாதுனு மறைத்தே தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டார்கள்.இப்போ திடீரென்று ஒருத்தி அடேய் வலிக்குதுடானு கத்தினால் பைத்தியகாரத்தனமாய் தான் இருக்கும்.ஒன்றை புரிந்து கொள்ளுங்கள்
நான் இது பற்றி பேச காரணமே இவ்வளவு இடைஞ்சல்கள் இருந்தாலும் பெண் சோர்ந்துவிடவில்லை விடவும் மாட்டாள்.அவள் வீக்கர் செக்ஸ் அல்ல. தானமாக ஊற்றுகின்ற உதிரத்தையும்..உயிர் கலைத்து ஊற்றுகின்ற உதிரத்தையும் எப்படி ஒன்றாகப் பார்க்க முடியும்?உதிர தானம்…அரைமணி நேர சோர்வு.உதிர போக்கு?

மேலும் சில பல வியாதிகளை மேற்கோள் காட்டுகிறீர்கள்.ஐயா,அதெல்லாம் வியாதி.மருந்து சாப்பிட்டால் குணமாகிவிடும்.அதிலும் அந்த வியாதி எல்லோருக்குமா வருது?அப்புறம் எப்படி இந்த கஷ்டம் அறிவார்கள்.? பெண்களின் வரமும் இது தான் …சாபமும் இது தான்.

வரம்- மனிதப் பூக்களை மலரச் செய்வது. சாபம்-அது பொருட்டு அத்தனை வலிகளையும் தான் உண்டு உயரத் துடிப்பது.

மிருகங்கள் கூடத் தான் பிரசவிகின்றன…இல்லையென்று யார் சொன்னது?அப்போ ஆண் மிருகத்தைவிட பெண் மிருகம் பலசாலி தானே.அவை குட்டி போடும் போது அவற்றின் முனகலையும் கதறலையும் கேட்டதுண்டா சார்?நாம் வலி தாங்கு திறன் பற்றி தானே பேசுகிறோம்.

மேலும் ஒரு முக்கியமான விஷயம் அவற்றிற்கு புணர்ச்சியும்,,அது கொண்டு இனப்பெருக்கமும் தான் முக்கியம்.இனபெருக்க காலம் அல்லாது மற்ற நேரங்களில் அவை புணர்வதில்லை. தன்னைப் புணர்வது யார் என்பதோ இது யாருடைய குட்டி என்றோ அதற்கு ஒரு கணக்கும் இல்லை.மனிதன் அவ்வாறா இருக்கிறான்?எப்ப தோனுதோ அப்பவெல்லாம்….(அதற்காகத் தானே வாழ்க்கை)இதையெல்லாம் விட இது உன் குழந்தை,,,உன் குடும்ப வாரிசு என பெற்று கையில் கொடுக்கிறாளே….அதிலேயே எல்லாம் அடங்கிவிடுகிறது சார்.

//தானே பிரசவித்து,சுத்தப்படுத்தி,தூளி கட்டி தூங்க வைத்துவிட்டு கூலி வேலையைத்தொடரும் பெண்கள் இல்லையா//அடேங்கப்பா பெண்களின் அசாதாரணத் தன்மையை இப்போதாவது புரிந்து கொண்டீர்களா சூப்பர் செக்ஸ்? நன்றி.

//ரோஜாவாக வரம் வாங்கிவிட்டு முட்களுக்கு முனங்கினால்//சூப்பர் சார்.பிரச்சினை என்னவென்றால் ரோஜாவின் முட்கள் அந்த ரோஜாவை கிழிப்பதில்லை.மாறாக காக்கின்றன.இங்கே என்ன நடக்கிறது?மலரும் முன்பே கிழிக்கப்படுகிறோமே?

பெண்ணின் போராட்டமெல்லாம் அவளது சர்வைவல் இன்ஸ்டிங்ட் தான் போகட்டும் ஆணுக்கு மட்டும் என்ன அதில் சலுகை?பொண்டாட்டி செத்தால் புது மாப்பிள்ளை இது சொலவடை.இது உண்மையும் கூட.இது எவ்வளவு பெரிய அயோக்கியதனம்?
பாவம் அவன் எப்படி பிள்ளைகளைப் பார்த்துகிட்டு பொளப்பையும் பாத்துகிட்டுனு சப்பைகட்டு.இது பிள்ளைகளை பார்த்துக் கொள்ள மட்டும் இல்லை என்று எல்லோருக்கும் தெரியும்.அவனுக்கு ஒரு புது செக்ஸ் கருவி தேவைப்படுகிறது…அவனது பிள்ளைகள பார்த்து வளர்க்க ஒரு ஆயா தேவைப்படுகிறது.ஒன் டைம் இன்வெஸ்ட்மெண்ட்.

ஆனால் இதுவே இந்த ஆப்ஷன்கள் பெண்களுக்கு 100ல் 99 பேருக்கு மறுக்கப்படுகிறதே(கேட்டால் தானே)ஏன்?அவள் சமாளிப்பாள்…குடும்ப குத்துவிளக்கு…அண்ட் ஆல் தட்.அவளுக்கான செக்ஸ்,ஒரு சோல் மேட் நிராகரிக்கப்படுகிறதே ஏன் சார்?இத்தனையும் தாண்டி அவள் மேருவாக வளர்கிறாளே அவளா வீக்கர் செக்ஸ்?

பணம் மட்டும் வேண்டும் என்று அவள் கேட்பதில்லை.பணமும் வேண்டும் என்று தான் கேட்கிறாள்.கணவனிடம் கேட்காமல் கண்டவனிடம் கேட்டா தான் சார் தப்பு. அதற்கும் முடியாதென்றால் அவள் ஓய்ந்துவிடுவதில்லை.அவனையும் உட்கார்த்தி சோறு போட தயாராகிவிடுகிறாள்.தன் பிள்ளைகளை ஒரு பெண் காப்பாற்றுவது சர்வைவல் இன்ஸ்டிங்ட் அல்ல
பிள்ளைகள் அவளது உணர்வுகளின் நூலிழைகள்.அவற்றை அறுக்க அவளால் முடிவதிலை.இவன் காப்பாறுவான் என எந்தத்தாயும் குழந்தைகளை வளர்ப்பதில்லை சார். ஐந்திற்கும் பத்திற்கும் அல்லாடும் போதும் அவன் வாங்கித்தந்த நகைகளை தருவதில்லை என்றீர்கள்.

இவர்கள் நீங்கள் சொன்னது போல லட்சங்களில் இல்லை குறைந்த எண்ணிக்கைகளில் தான் இருக்கிறார்கள்.அதுவும் கொடுத்து கொடுத்து ஏமாந்த நிலையில் தான் இந்த முடிவிற்கு வருகிறாள்.ஏன் சார் உங்க சூப்பர் செக்ஸ் அவளிடம் கெஞ்சவேண்டும்?
பிளாட்பார்மில் வாழ்பவர்களிடம் எந்த ஈகோவும் இல்லை சார்.கிடச்சா கஞ்சி தண்ணி,,கிடைக்காட்ட குழா தண்ணி.உண்மையில் செக்ஸ் லைஃபிலும் பூரணத்துவத்துடன் வாழ்பவர்கள் அவர்களே.முடிஞ்சா இறுக்கிக்குவா…முடியலேனா தள்ளிடுவா..பரஸ்பரம் அவர்களது தேவைகளை வாய்விட்டு சொல்லிக் கொள்ளும் சுதந்திரமாவது அவர்களுக்கு இருக்கிறது.

உங்க முதல் பதிலுக்கு இப்ப வரேன்.நான் குடும்ப வாழ்வில் செக்ஸ் சிறு பகுதி எனச் சறுக்கினேனா?நெவர்.என்ன சொன்னீங்க //உயிர் வாழ்வதற்கான உந்துதலைத் தருவது செக்ஸ்.இது ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை தந்திருக்கும் உரிமை//

ப்ராவோ!!!

உயிர் வாழ்வத்ற்கான உந்துதல் செக்ஸ்.ஏன் அந்த செக்ஸ் இல்லாமல் வாழ முடியாதா?ஒவ்வொரு உயிருக்கும் இயற்கை தந்திருக்கும் உரிமை… அட அந்த உரிமை ஏன் பெண்களுக்கு மறுக்கப் படுகிறது?இது தான் கேள்வி.தனக்கு தேவையானால் அதை பெற ஒரு ஆண் விழையும் போது அவனால் தன் துணையை பகிங்கிரமாய் படுக்க அழைக்க முடியும்.பெண் அழைத்தால்?

வேலைகளை முடித்துவிட்டு வந்து படுக்கும் போது தன்னைச் சீண்டும் துணையை ஏற்று சரி இதிலாவது ரிலாக்ஸ் ஆகலாம் என்று மனம் ஒப்பினால்…1 2 3 4 அவ்வளவு தான் முடிந்துவிடும்

அல்லது முடித்துவிடுவான்.புரண்டு தூங்கி விடுவான்.முக்கால்வாசிபேர் செக்ஸை ஒரு தூக்க மாத்திரை போலத்தான் நினைக்கிறார்கள்.ஏற்கனவே இருந்த ஆயாசம்…இவனால் சுரண்டப்பட்ட பெண்மையின் விழிப்பால் ஏற்பட்ட அதிர்வுகள்,முழுமையான முயங்குதல் இல்லாத அயர்ச்சி ஒரு பெண்ணை என்னென்னச் செய்யும் தெரியுமா சூப்பர் செக்ஸ்?

தன்னுள் புதைந்து தானே மீண்டும் மீண்டும் உயிர்த்தெழும் கட்டாயம் அவளை உன்மத்தம் கொள்ளச் செய்கிறது.சேர்த்து வைத்த மதமதப்பு ஒரு நாள் சீறி வெடிக்கிறது.அது கொலையகவோ,தற்கொலையாகவோ அல்லது நீங்கள் சொன்னது போல சாமியாடுதல்.ஹிஸ்டீரியா என மாறி போகிறது..

ஆனால் தன் துணையின் இந்த குறையை(இது குறையில்லாமல் என்ன)பொருட்படுத்தாமல் போய் தொலை என்று தன்னை அதற்கேற்றால் போல் மாற்றி தன் உடம்பை அடக்கி வாழ்வது சறுக்கலா.சவால் சார்.போடானு அவள் தன்னை முழுமைப்படுத்துபவனை தேடத்துவங்கினால்……இது பரவாயில்லையா?

புணர்ந்து பிள்ளையை கொடுத்துவிட்டால் ஆண்மையோ?நாயும்,பன்றியும் தான் புணர்கின்றன,பெறுகின்றன.புணர்ச்சிக்கும் உடலுறவிற்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

புணர்ச்சி-மிருகங்கள் செய்வது.ஏனெனில் அங்கு மனம் வேலை செய்வதில்லை.வெறும் உணர்வே
உடலுறவு_இது இரு மனிதர்களுக்கானது.மனம் புரிந்த இரு உடல்கள் ஒன்றில் ஒன்றைத் தேடி ஒன்றாக ஐக்கியமாவது.மனம் தொட்டு சொல்லுங்கள் ஆண்களே… இப்படி நடக்கிறதா உங்கள் உறவு?உங்கள் வேகம் தான் வேலை செய்கிறது.தன் துணையை உங்கள் இச்சைக்கு தயாராக்கும் பொறுப்பு உங்களிடம் தானே இருக்கிறது?

அவளது உடலுக்கான முயங்கும் அவகாசம் தரப்படுகிறதா?என்ன செய்தால் இவள் தயாராவாள் என்று கணித்திருக்கிறீர்களா?உங்கள் வேகம்,தாகம்,மோகம் இது தானே உங்களை இயக்குகிறது.ஆனால் மாறாக அவள் உங்கள் தாங்கு திறனை கணித்துவிடுகிறாள்.அதற்கேற்றார் போல் தன்னை அட்ஜெஸ்ட் செய்து கொள்கிறாள்.

இப்படி செய்தால் தான் நீங்கள் வெளியே காலரை உயர்த்தி அலைய முடியும்.இல்லாவிட்டால் அஸ்திவாரமே ஆட்டங்கண்டுவிடும்.இது அவளது இயலாமையோ,முயலாமையோ இல்லை அன்பரே….அவளது மகத்தான கருணை.

இவ்வளவும் ஏன் சொல்கிறேன் என்றால் உங்கள் நேர்மையில்,உங்கள் எழுத்தை வாசிக்கும்,நேசிக்கும்,மயங்கும் உங்கள் வாசகர்களில் ஒரு 10 பேராவது தன் துணையை அவளுக்கான முழு அங்கீகாரத்துடன் அழகான முறையில் அத்தியாவசியமான செக்ஸை முழுமையாக அவளுக்கும் அளித்து தானும் அனுபவித்து அவளை மேலும் பலப்படுத்த வேண்டும் என்று தான்.

தயவுசெய்து இதற்கு கவுண்டர் பண்ண வேண்டாம்

அன்பரே.நீங்கள் சொன்னால் கேட்க நிறைய பேர் காத்திருக்கிறார்கள்.அவர்கள் நல்லவிதமாக வாழ வேண்டும்.ஏனென்றால் நீங்கள் நல்லவிதமாக வாழ்ந்து வருகிறீர்கள் என்பதை உங்கள் எழுத்துக்கள் அறியத்தருகின்றன.

எழுத்துக்களுக்கென்று ஒரு தர்மம் உண்டு நல்ல எழுத்துக்கள் உயிர் தன்மை பெறுகின்றன.

வாழ்க இவ் வையகம்….வாழ்க இவ்வையத்து மாந்தர் அனைவரும்
மறுபடி சொல்கிறேன்….இந்த உலகில் கடைசி மனிதன் வாழும் வரை பெண் வீக்கர் செக்ஸ் கிடையாது…கிடையவே கிடையாது.ஜனனம் என்று உள்ள வரை பெண் வீக்கர் செக்ஸ் கிடையாது.

அவள் மகா சக்தி

டிஸ்கி:
மேற்படி வாசகி என்னைத்தான் கவுன்டர் கொடுக்க வேண்டாம்னு சொல்லியிருக்காங்களே தவிர இதை படிக்கிற நீங்க கமெண்ட் பண்ணக்கூடாதுன்னு சொல்லல.

ஆகவே நம்ம எழுத்துக்களை தொடர்ந்து படித்து குட்டி முருகேசனாய் “கெட்டு குட்டி சுவராகி” போன நண்பர்கள் உரிய மறுமொழிகளை தந்து உதவுமாறு கேட்டு கொள்கிறேன்.

2 Replies to “வாசகி கடிதம் :2 ( ஆண் பெண் வித்யாசங்கள் நூல் விமர்சனம்)”

மகிழ்நன்

03/07/2017 at 11:31 am

உடலும் அதன் இயங்கு தத்துவமும் பெண்களுக்கு , பெண்களால் இளம் வயதிலேயே கற்றுத்தரப்படுகிறது. ஆண்களுக்கு யாரும் சொல்லித்தருவதில்லை.ஆனால் தவறாக திசை திருப்ப வாய்ப்புகள் அதிகம். ஆண்களுக்கு மன முதிர்ச்சி சற்று தாமதமாகத்தான் கிடைக்கப்பெறுகிறது. முறைப்படி இளம் வயதிலேயே ஆண், பெண்ஈர்ப்பு , உடலியல் கல்வி , காமம், காதல், நட்பு ஆகியவற்றின் அடிப்படை தத்துவத்தை கற்றுக்கொடுத்தால் , உடல் பற்றிய அடிப்படை நுட்பங்கள் தெரிய வரும். வாசகியின் கூற்றுக்கள் முற்றிலும் உண்மை. வாழ்த்துக்கள்.

Reply

  S Murugesan

  03/07/2017 at 1:23 pm

  மகிழ்நன் !

  பெண்களுக்கு -பெண்களால் கற்றுத்தரப்படுவதெல்லாம் “வயித்துல வாங்கிக்கிட்டு வந்துர போற” என்ற அச்சுறுத்தல் மட்டுமே.

  ஆண்கள் விஷயத்தில் வயதில் மூத்த ஆண்களின் நட்பு கிடைத்தால் இது மாற வாய்ப்பிருக்கிறது.ஆனால் அந்த பக்கிகளுக்கு எந்தளவு தெளிவு இருக்கும் என்பதும் சந்தேகமே

  Reply

Post Your Comment Here

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.